வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று முற்பகல் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட சிலர் சென்றனர்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இதையொட்டி மோடி நேற்று (13ந்தேதி) மாலையே வாரணாசி வருகை தந்தார்.  இன்று முற்பகல் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, 4கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ளது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் கடைசி கட்டமாக ஜுன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு முதல்முறையாக நரேந்திர மோடி, வாரனாசி தொகுதியில் போட்டியிட்ட போது 5 லட்சத்து 81 ஆய்ரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில், 6 லட்சத்து 74 ஆயிரம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்ற நிலையில், தற்போது 3வது முறையாக அவர் போட்டியிடுகிறார்.

வாரணாசி தொகுதி தற்போது பா.ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. 5 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட வாரணாசி பாராளுமன்ற தொகுதி பல ஆண்டுகளாக பா.ஜ.க-காங்கிரஸ் இடையே பெரிய போட்டி களமாக இருந்துவருகிறது. அத்தொகுதியில் பா.ஜ.க. 7 தடவையும், காங்கிரஸ் 6 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இதுவரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று மாலை வாரணாசி சென்றடைந்த பிரதமர் மோடி 6 கிமீ தூரத்திற்கு ரோட் ஷோ நிகழ்த்தினார். லங்கா பகுதியில் உள்ள மாளவியா சௌராஹாவில் இருந்து தொடங்கிய ரோட் ஷோ, பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்று காசி விஸ்வநாத் தாமில் முடிவடைந்தது. இதில் காவி உடையணிந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இசைவாத்தியங்கள் முழங்கியும், மலர்களை தூவியும் பாஜக தொண்டர்கள் மோடியை வரவேற்றனர்.

பிரதமர் மோடி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வதையொட்டி வாரணாசி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மோடி மனுத்தாக்கல் செய்யும் இடத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர்.

இன்று காலை எழுந்த பிரதமர் மோடி,  தசாஷ்வமேத் கட்டில் (GHAT) உள்ள, மா கங்கைக்கு சென்று, கங்கையில் சிறப்பு பூஜையை முடித்த பிறகு கப்பலில் பயணம் செய்து கால பைரவர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவரை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் வரவேற்றார்.  அங்குள்ள கால பைரவர் கோவிலில் மோடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் காலை 10.45 மணிக்கு பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் தேர்தல் பிரசாரம் வியூகங்கள் குறித்து விவாதித்தார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய புறப்பட்டார்.

  மோடி,  ரோடு ஷோ நடத்தியபடி ஊர்வலமாக சென்றார். அவருடன் பா.ஜனதா முக்கிய தலைவர்களும் உடன் சென்றனர். இதில் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். வழிநெடுகிலும் பிரதமர் மோடியை உற்சாகமாக மக்கள் வரவேற்றனர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோவை பிரதமர் மோடி நடத்தினார். அதைத்தொடர்ந்து, பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேட்பாளருடன் குறிப்பிட்ட அளவு நபர்களே செல்ல வேண்டும் என்பதால் ரோடு ஷோ, மனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்துக்கு சிறிது தூரத்துக்கு முன்பாக முடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், உ.பி. மாநில முதல்வர் யோகி உள்பட கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜக முதல்வர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறத.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை  எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சார்பில் ஏ.ஜமால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

Photos and Videos: Credit ANI