சென்னை: வெளிநாடு செல்பவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் மஞ்சள் காய்ச்சல் எனப்படும் ஒருவகையான தொற்று நோய் பரவி வருகிறது. குறிப்பா,க ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் மஞ்சள் காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் இருந்து சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வந்து செல்பவர்களுக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பத்து நாட்களுக்குப் பிறகு மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அல்லது இந்தியா வருவதற்கு அனுமதிக்கும் வண்ணம் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சான்றிதழ் மூலம கண்காணிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மஞ்சள் காய்ச்சல் விவரங்கள் மற்றும் தடுப்பூசி மையங்கள் குறித்தான விவரங்கள் இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மத்திய, சுகாதார அமைச்சகம் அங்கீகரித்துள்ள மூன்று மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் தடுப்பூசி மையங்களில் வெளிநாடு செல்பவர்கள் கடவுச்சீட்டு மற்றும் தங்களது விவரங்கள் அடங்கிய தொகுப்பு மருத்துவ விவரங்கள் ஆகியவற்றை அளித்து தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது அதன்படி சென்னை கிண்டி கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை துறைமுகம் சுகாதார நிறுவனம், தூத்துக்குடி துறைமுக சுகாதார மையம் ஆகியவற்றில் ரூ.300 கட்டணமாக செலுத்தி சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வர்கள் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது .
மஞ்சள் காய்ச்சல் என்றால் என்ன?
மஞ்சள் காய்ச்சல் என்பது ஃபிளவி வைரஸால் ஏற்படும் மிகவும் தீவிரமான, அபாயகரமான, கொசுக்களால் பரவும் நோயாகும். ஏடிஸ் மற்றும் ஹேமகோகஸ் வகை கொசுக்களால் இந்த வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்ட மனிதனையோ அல்லது விலங்குகளையோ (குறிப்பாக விலங்குகளை) கடிக்கும் போது கொசு தொற்று ஏற்படுகிறது.
இந்த நோய் ஆப்பிரிக்கா மற்றும் வெப்பமண்டல தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் பரவக்கூடியது மற்றும் இடையிடையே ஒரு தொற்றுநோய். மஞ்சள் காய்ச்சலின் கடுமையான நிகழ்வுகள் அதிக காய்ச்சல், உட்புற இரத்தப்போக்கு மற்றும் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் கல்லீரல் பாதிப்பு கடுமையான மஞ்சள் காமாலையில் விளைகிறது , இதனால் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாகின்றன, எனவே ‘மஞ்சள் காய்ச்சல்’ என்று பெயர்.
மஞ்சள் காய்ச்சல் கடுமையான ரத்தக்கசிவுகளுடன் தொடர்புடையது என்பதால், உங்களுக்கோ அல்லது எந்த குடும்ப உறுப்பினருக்கோ இந்த நோயின் அறிகுறிகளுடன் பொருந்தக்கூடிய அறிகுறிகளை நீங்கள் கண்டால், எந்தவொரு அபாயகரமான விளைவுகளையும் தவிர்க்க தாமதமின்றி உங்கள் குடும்ப மருத்துவரை அல்லது பொது மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.