சென்னை: வெப்பம் காரணமாக தொழிலாளர் உடல்நலம் பாதிப்பதை தடுக்கும் வகையில்  சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநகர பகுதிகளில்,  வாட்டி வதைக்கும் வெயிலின் காரணமாக பகல் நேரத்தில் திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு விதித்து தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் லேசான மழை ஆங்காங்கே பெய்து வந்தது. ஆனால் சிறிது நேரம் மட்டுமே மழை பெய்தது. மேலும் வெப்பத்தை அதிகரித்து சென்றது. இவ்வாறு இருக்க மழை எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த  நிலையில் சென்னையில் காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரை வெயில் வாட்டி வதைப்பதால் திறந்தவெளியில் கட்டுமான தொழிலாளர்கள் பலரும் வேலை செய்து வருவதால் அவர்கள் அனைவரும் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஏற்கனவே வடமாநில தொழிலாளி ஒருவர் ஹீட் ஸ்டோராக்கால் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, வெயில் காரணமாக மக்கள் அனைவரையும் மதிய வேலைகளில் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று ஏற்கனவே மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. பலரும் வெயிலின் காரணமாக அவதி அடைந்து வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் வெயிலின் தாக்கம் காரணமாக வெப்பத்திற்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலையை மதிய நேரத்திற்கு பதிலாக இரவு நேரங்களில் பார்க்கலாம் என்று அறிவுறுத்தி வந்தனர். இவ்வாறு இருக்க சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் 4 மணி வரை எவ்வகையான திறந்த வெளி கட்டுமானப்பணிகளையும் மேற்கொள்ள கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கு தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தொழிலாளர்களின் உடல் நிலையைக்கருத்தி கொண்டு மே மாதம் இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.