கோவை: குறைந்த கட்டணத்தில் ரஷியாவில் மருத்துவம் படிக்க ஆசைப்படும் மாணவர்களும், பெற்றோர்களும் உடனே அதற்கான பணிகளை தொடங்கலாம். ரஷியாவில் இந்தியர்களுக்கு மட்டும் 8000 மருத்துவ பணியிங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு உள்பட இந்தியா மாணவர்களிடையே மருத்துவ படிப்புக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அதனால், நீட் தேர்வு மூலம் எந்தவித டோனேஷனும் இன்றி, அரசின் கட்டணத்தில் ஆண்டுக்கு பல லட்சம் மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்த நிலையில், ரஷியாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்களில் இந்த ஆண்டு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் இந்திய மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக ரஷிய கலாசார மையத்தின் இயக்குநரும், துணைத் தூதருமான அலெக்ஸாண்டா் டோடோநவ் தெரிவித்துள்ளாா்.
இதைத்தொடர்ந்து வரும் 17ந்தேதி (வெள்ளிக்கிழமை) ரஷிய பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை குறித்த கையேட்டை கோவையில் ரஷிய துணைத் தூதா் வெளியிடுகிறார்.
பிளஸ் 2 முக்கிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் ரஷிய அரசு பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயிலத் தகுதியானவா்கள்.
தமிழ் வழியில் பயின்றவா்களும் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆங்கில தகுதித் தோ்வு எழுத வேண்டியதில்லை. அதேபோல ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கல்விக் கட்டணத்திலேயே மருத்துவம் படிக்க முடியும்.
அத்துடன் ரஷிய அரசு ஆண்டுதோறும் 200 இந்திய மாணவா்களுக்கு 100 சதவீத கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் உதவித் தொகை பெறுவதற்கான மாணவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள்.
ரஷியாவில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான நேரடி மாணவா் சோ்க்கை, கோவை அவிநாசி சாலையில் உள்ள கிராண்ட் ரீஜண்ட் ஹோட்டலில் வரும் 17- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 92822 21221 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
ரஷியாவில் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசுப் பல்கலைக்கழகங்களில் சுமாா் 200 நாடுகளைச் சோ்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்திய மாணவா்கள் சுமாா் 25 ஆயிரம் போ் 30 ரஷிய பல்கலைக்கழகங்களில் படித்து வருகின்றனா். இந்திய மருத்துவ ஆணையம் 2021-இல் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, மருத்துவப் படிப்புத் திட்ட காலம், பாடத் திட்டம், மருத்துவப் பயிற்சி, பயிற்றுமொழி போன்றவற்றை ரஷிய பல்கலைக்கழகங்கள் பின்பற்றுகின்றன. சா்வதேச கல்வி நிறுவனங்களின் தர வரிசையில் ரஷிய உயா் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வரும் நிலையில், ரஷியாவில் கற்பிக்கப்படும் மருத்துவக் கல்வி சா்வதேச தரத்துடன் உள்ளது.