தஞ்சாவூர் மாவட்டம்,  அய்யாவாடி,  பிரத்யங்கிரா தேவி ஆலயம்.

மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது, சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்டான். ராமன் அவனுடன் போரிட இலங்கை சென்றார். தன் சகோதரர்களையும், மகன்களையும் வரிசையாக ராமனுடன் போரிட அனுப்பிய ராவணன், எல்லாரையும் இழந்தான். மிகுந்த பலசாலியான இந்திரஜித் ஒருவன் எஞ்சியிருந்தான்.

காளி பக்தனான அவன், ராமனை போரில் தோற்கடிப்பதற்காக அவளை வேண்டினான். மன்னர்கள் அக்காலத்தில் போரில் வெற்றி பெறுவதற்காக, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோற்றுவித்து அதர்வணகாளியான பிரத்யங்கிரா தேவி’க்கு நிகும்பலா யாகம் நடத்துவார்கள்.

அந்த யாகத்தை இந்திரஜித்தும் பிரம்மாண்டமாக நடத்தினான். நிகும்பலா யாகம் மட்டும் முடிந்து விட்டால் இந்திரஜித் மாபெரும் சக்தியை அடைந்து விடுவான். அதன் பின் அவனை போரில் வெல்ல யாராலும் முடியாது. இந்த விஷயம் ராமனுக்கு தெரிந்து விட்டது. ராமபிரானும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். இந்திரஜித் அநியாய வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்துவதையும், பரமாத்மாவான ராமன் நியாயத்திற்காக யாகம் நடத்துவதையும் அறிந்து கொண்டாள் பிரத்யங்கிரா.

ராமரின் யாகத்திற்கும், அவரது நியாயமான கோரிக்கைக்கும் செவி சாய்த்த தேவி அவருக்கு அனுக்கிரஹம் புரிந்தாள். தன் நீண்ட நாள் பக்தனாயினும், அநியாயத்துக்கு துணைபோன இந்திரஜித்தின் பூஜையை ஏற்க மறுத்துவிட்டாள். எனவே இந்திரஜித் போரில் தோற்றான். இருந்தாலும், தன் பக்தன் என்ற முறையில், அவனது வீரம் ராமாயணத்தில் புகழப்படும் வகையில் ஆசி தந்தாள்.

திருவிழா:

இங்கு அமாவாசை தோறும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை நிகும்பலா யாகம்’ நடக்கிறது.

தல சிறப்பு:

தலவிருட்சம் ஆலமரம். இதில் ஆல், அரசு, புரசு, இச்சி, மா இலைகள் இருப்பது விசேஷம். மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் கொட்டுவார்கள். சாதாரணமாக ஒரு மிளகாய் வத்தலை தீயில் போட்டாலே நெடி இருக்கும். ஆனால், நிகும்பலா யாகத்தில் மூடை மூடையாக போடப்படும் மிளகாய் வத்தலிலிருந்து சிறிது நெடி கூட இருக்காது. கலியுகத்தில் இது மாபெரும் அதிசயம்.

பொது தகவல்:

கோயில் விமானம் வடமாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. பிரத்யங்கிரா தேவி தனி சன்னதி கொண்டு வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறாள்.

பிரார்த்தனை:

நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், எதிரிகளின் தொல்லை விலகும், கடன் தொல்லை தீரும், உத்தியோக உயர்வு கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு உருவாகும், திருமண பாக்கியம் விரைவில் கிடைக்கும், வியாபாரம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

சனி தோஷம் உள்ளவர்களும் யாகத்தில் பங்கேற்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் நடக்கும் இந்த யாகத்தில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சிறப்பம்சம்:

இங்கு தலவிருட்சமான ஆலமரத்தில் ஆல், அரசு, புரசு, இச்சி, மா இலைகள் இருப்பது விசேஷம். நிகும்பலா யாகத்தில் மூடை மூடையாக போடப்படும் மிளகாய் வத்தலிலிருந்து சிறிது நெடி கூட இருக்காது.

அமைவிடம்:

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம், உப்பிலியப்பன் கோயில் வழியாக இத்தலத்தை அடையலாம். உப்பிலியப்பன் கோயிலிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் அய்யாவாடி உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்:

திருச்சி

தங்கும் வசதி:

கும்பகோணம்