டெல்லி: லோக்சபா தேர்தலின் 4வது கட்ட தேர்தல்வாக்குப்பதிவ இன்று 10 மாநிலங்களின் 96 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று   காலை 9மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

நான்காம் கட்ட தேர்தலில் காலை 9 மணி வரை 10.35% வாக்குகள் பதிவாகியுள்ளன.


18வது மக்களவைக்கான 4வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (மே.13) நடைபெறுகிறது. ஆந்திரா, தெலங்கானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் 4வது கட்ட தேர்தலில் 1717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

ஆந்திராவில் முன்னாள் துணை குடியரசு தலைவரான வெங்கையாநாயுடு தனது மனைவியுடன் சென்று வாக்கு செலுத்தினார். அதுபோல மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், திரையுலகினர், பொதுமக்கள் என பல தரப்பினரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

நான்காம் கட்ட தேர்தலில் காலை 9 மணி வரை 10.35% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஆந்திரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.21% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஒடிசா மாநில சட்டப் பேரவைக்கான முதல் கட்டத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.25% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பீகார் மாநிலத்தில்  10.18%,  ஜம்மு மற்றும் காஷ்மீர் 5.07%,  ஜார்கண்ட் 11.78%,  மத்தியப் பிரதேசம் 14.97%, மகாராஷ்டிரா 6.45%, ஒடிசா 9.23%, தெலுங்கானா 9.51%, உத்தரப் பிரதேசம் 11.67%, மேற்கு வங்காளம் 15.24% வாக்குகள் பதிவாகி உள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.  இதில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 26ஆம் தேதி 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு 2வது கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேலும், கடந்த மே 7ஆம் தேதி 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 மக்களவை தொகுதிகளுக்கு 3வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (மே.13) ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் 4வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

மக்களவை தேர்தலுக்கு இடையே ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் இன்று (மே.13) சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திரா பிரதேசத்தில் உள்ள 175 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், ஒடிசாவில் உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேலும் ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கும் தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 171 வேட்பாளர்கள் இன்று களம் கண்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக தெலங்கானாவில் ஆயிரத்து 488 பேரும், அதைத் தொடர்ந்து ஆந்திராவில் ஆயிரத்து 103 பேரும் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 17 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். இதில் 8 கோடியே 97 லட்சம் பேர் ஆண்கள் மற்றும் 8 கோடியே 73 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மக்களவை தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். கன்னோஜ் தொகுதியில் முதலில் அகிலேஷ் யாதவின் மருமகன் தேஞ் பிரதாப் யாதவ் போட்டியிட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அகிலேஷ் யாதவ் களமிறங்கினார். கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் கன்னோஜ் தொகுதி சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக காணப்பட்ட நிலையில், கடந்த 2019ஆம் அண்டு அங்கு பாஜக வெற்றி கொடி நாட்டியது, மீண்டும் கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் கொடி பறக்குமா என்பது தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தான் தெரியவரும்.

மேற்கு வங்கம் மாநிலம் பஹ்ரம்பூர் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரபல கிரிக்கெட் வீரர் யூசுப் பதானை களமிறக்கி உள்ளது. அதேபோல் கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மஹுவா மொய்த்ரா போட்டியிடுகிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிட மஹுவா மொய்த்ரா 6 லட்சத்து 14 ஆயிரத்து 872 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த முறை அதே கிருஷ்ணாநகர் தொகுதியில் மீண்டும் மஹுவா மொய்த்ரா போட்டியிடுகிறார்.

அதைத் தொடர்ந்து அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஐதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் அசாதுதீன் ஒவைசி ஐதராபாத்தில் நின்று வெற்றி பெற்று வருகிறார். அதேபோல் 25 மக்களவை தொகுதிகளை கொண்ட ஆந்திர பிரதேச மாநிலத்தில் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

இதில் கடப்பா தொகுதியில் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் அவினாஷ் ரெட்டி போட்டியிடுகிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் எதிரெதிரே போட்டியிடுவதால் கடப்பா தொகுதி தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

மாநில வாரியாக  இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள்:

ஆந்திர பிரதேசத்தில் 25 தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், பீகாரில் 5 மக்களவை தொகுதிகள், ஜார்கண்டில் 4 இடங்கள், மத்திய பிரதேசத்தில் 8 இடங்கள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், ஒடிசாவில் 4 இடங்கள், உத்தர பிரதேசத்தில் 13 மக்களவை தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு மக்களவை தொகுதி என மொத்தம் 96 மக்களவை தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது