நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறைமுகம் பயணிகள் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 10 முதல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டு இதற்காக கேரள மாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல், நாகை துறைமுகத்திற்கு அக்டோபர் 7 ஆம் தேதி வந்தடைந்தது.

கப்பலில் பயணிக்க பயணிகளுக்கான கட்டணம் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் ரூ.6,500 என நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் கப்பலில் பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடமைகளை கொண்டு செல்லலாம் எனவும், இந்த பயணத்துக்கு பாஸ்போர்ட், இ விசா கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் குறைவான பயணிகள் மற்றும் சீதோஷ்ண நிலையை காரணம் காட்டி இந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

பிறகு சிவகங்கை என்ற பெயர் கொண்ட புதிய கப்பல் இன்று (மே 13) முதல் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது இலங்கை செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்பதால் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தொடங்க இருந்த நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, வரும் 17-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக் கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.