சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று காலை பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் படிப்புகள் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்ல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, . இன்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி www.tneaonline.org அல்லது www.dte.gov.in என்ற இணையதங்கள் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். ஓ.சி., பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, டி.என்.சி பிரிவினருக்கு ரூ 500, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ 250 பதிவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஜூன் மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்யலாம் என்றும், விண்ணப்பித்தவர்கள், ஜூன் 12ம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பங்கள் பதிவு, முடிவடைந்த பிறகு, ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, ஜூன் 12 ஆம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படுட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் இன்றுமுதல் விண்ணப்பம் விநியோகம் தொடங்கி உள்ளது. கடந்தாண்டைப் போலவே மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்த பின்னர், ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையில் செய்தியளார்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், இந்தாண்டு முதுகலை பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். அதாவது, எம்.இ,(M.E) எம்.டெக்,(M.Tech) எம்.ஆர்க்,(M.Arch) எம்.பிளான்(M.Plan) ஆகிய முதுகலைப் பொறியியல் படிப்பில் நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2024-2025) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற முகவரியில் இன்று முதல் பதிவு செய்யலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-2025ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 6ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம். தாமாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மையங்களின் பட்டியல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.
கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் அல்லது யுபிஐ மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்.
இணையதளம் மூலம் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள். கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் மே 6 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம்.
மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை www.tngasa.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 044 – 24343106 அல்லது 24342911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 -25ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு, முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் கடந்த ஜன.10ஆம் தேதி முதல் பிப்.12ஆம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற்றது. எம்.சி.ஏ படிப்பிற்கு 9 ஆயிரத்து 206 பேரும், எம்.பி.ஏ படிப்பிற்கு 24 ஆயிரத்து 814 பேரும், எம்.டெக், எம் ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு 5 ஆயிரத்து 281 பேரும் விண்ணப்பம் செய்தனர்.
எம்.சி.ஏ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்குக் கடந்த மார்ச்.9ஆம் தேதி காலையிலும், எம்.பி.ஏ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 9ஆம் தேதி பிற்பகலிலும், முதுநிலை பொறியியல் நுழைவுத்தேர்வு கடந்த மார்ச் 10ஆம் தேதியும் தேர்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து, முதுகலைப் பொறியியல் படிப்பில், கேட் நுழைவுத்தேர்வின் மூலம் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பம் கடந்த ஏப்.15ஆம் தேதி முதல் மே.14 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் ஆகியவற்றில் முதுகலை பொறியியல் படிப்பான எம்.இ, எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் ஆகியவற்றில் 2448 இடங்கள் உள்ளது.
முதுகலை பொறியியல் படிப்பு குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் கூறும்போது, “முதுகலை பொறியியல் படிப்பில் சேர்வதற்குக் கேட் தேர்வு, அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு ஆகியவற்றில் உள்ள இடங்களுக்குத் தனித்தனியாகச் சேர்க்கை நடத்தப்படும். சீட்டா தேர்வின் மூலம் சேர்வதற்கு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.
கடந்தாண்டுகளில் முதுநிலை மாணவர் சேர்க்கை தாமதமாக ஆரம்பித்ததால் மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டு வந்தது. நல்ல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இருக்காது. காரணம் நல்ல கல்லூரியைப் பார்த்துப் பயப்படும் மாணவர்கள் விண்ணப்பம் செய்தால் இடம் கிடைக்காது என நினைக்கின்றனர்.
ஆனால், இடம் காலியாகத்தான் இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்திலும் சில பிரிவுகளிலும் இடம் காலியாக இருக்கிறது. அதற்கு மாணவர்கள் இங்கு இடம் கிடைக்காது என நினைத்து சிறிய கல்லூரியில் சென்று நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்கின்றனர்.
இதனால் நல்ல கல்லூரியில் சேர்க்கை இல்லாமல் இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முன்கூட்டியே ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை துவக்கப்படவுள்ளது.
முதுகலைப் படிப்பில் இணைப்பு பெற்ற கல்லூரியில் உள்ள இடங்களை தற்பொழுது மாணவர் சேர்க்கையில் சேர்க்க வில்லை. அண்ணா பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரியின் இடங்களை மட்டுமே சேர்த்துள்ளோம்.
தற்பொழுது 4648 விண்ணப்பம் வந்துள்ளது. கல்லூரியில் 2448 இடங்கள் உள்ளது. மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். கேட் தேர்வின் மூலம் சேர்வதற்கு விண்ணப்பம் செய்வது குறைவாகவே உள்ளது. முன்னர், கேட் மாணவர்கள் அதிகம் சேர்வார்கள். தற்பொழுது ஐஐடி, என்ஐடி போன்றவற்றில் சேர்ந்து வருகின்றனர். முன்கூட்டியே மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டதால் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இளங்கலைப் படிப்பினை முடித்தவுடன் மாணவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலைக் கிடைப்பதால், தனியார் நிறுவனங்கள் திறமையான மாணவர்களைத் தேர்வு செய்து வேலைக்கு எடுத்துச் செல்கின்றனர். அதற்குக் கீழே உள்ள மாணவர்கள் தங்களால் முதுகலை பொறியியல் படிப்பினைப் படிக்க முடியாது என நினைப்பதும் சரியானது தான்.
அதிலும், சிலர் தான் முதுகலைப் பொறியியல் பட்டம் பெற்று ஆராய்ச்சி செய்யவும், ஆசிரியர் பணிக்குச் செல்ல வேண்டும் என விரும்புவர். அது போன்று உள்ளவர்கள் தான் முதுகலைப் பொறியியல் படிப்பிற்கு வருகின்றனர். வேலைக்குச் சென்ற பின்னர் சிலர் பணியின் நேரம் பிடிக்காமலும், ஆசிரியர் பணிக்குச் செல்ல விரும்பி வருகின்றனர். அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்காகக் குறிப்பிட்ட பிரிவில் படிக்க வருகின்றனர்.
முதுகலைப் பொறியியல் படித்தால் கம்ப்யூட்டர் துறையில் மட்டும் தான் ஆசிரியர்கள் பணிக்குத் தேவையாக இருக்கின்றனர். மற்றப் பிரிவுகளில் அதிகமாக இருக்கின்றனர். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததால், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் புதியதாக ஆசிரியர் பணி கிடையாது.
எனவே, இந்தப் பிரிவுகளில் எம்.இ சேர்க்கையும் குறைந்து விட்டது. முதுகலைப் பொறியியல் படிப்பில் உள்ள 2500 இடங்களில் 1200 இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரியில் தான் இருக்கிறது. குறிப்பிட்ட கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் தான் மாணவர்கள் அதிகம் சேருகின்றனர். மற்றப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை குறைவாகவே இருக்கிறது” எனத் தெரிவித்தார்.