பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை கடத்தியது தொடர்பாக மதசார்பற்ற ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ-வும் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் மகனுமான ரேவண்ணா பெங்களூரில் இன்று கைது செய்யப்பட்டார்.
300க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ரேவண்ணா மகன் பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான ஆயிரக்கணக்கான வீடியோ அடங்கிய பென் டிரைவ் வெளியாகி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இதனைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனியில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை கடத்திச் சென்று மைசூர் ஹுன்சூர் தாலுகா காலேனஹள்ளியில் உள்ள ரேவண்ணாவின் பிஏ ராஜசேகரின் பண்ணை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு அந்தப் பெண்ணை மீட்டனர்.
பெண் கடத்தல் தொடர்பாக கைதாவதை தவிர்க்க ரேவண்ணா முன்ஜாமீன் கூறியிருந்த நிலையில் அவரது ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து பத்மநாபநகரில் உள்ள முன்னாள் பிரதமர் எச்டி தேவகவுடாவின் இல்லத்துக்கு சென்ற காவல்துறையினர் அங்கிருந்த ரேவண்ணா-வை கைது செய்தனர்.