டெல்லி: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில் அவர் உள்பட கைது செய்யப்பட்ட 5 பேரின் காவலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தமிழ்நாட்டைச் சேர்ந்த போதை பொருள் கடத்தல் மன்னனான முன்னாள் திமுக நிர்வாகி, ஜாபர் சாதிக், கடந்த மார்ச் 9ஆம் தேதிக் கைது செய்யப்பட்டார். அவரைத்தொடர்ந்து மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் நீதிமன்ற காவல் மே 6 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
ஜாபர் சாதிக் போதை பொருள் விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து அமலாக்கத்துறையும் ஆய்வு செய்தது. தொடர்ந்து, ஜாஃபர் சாதிக் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த வழக்கில் ஜாஃபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஜாஃபர் சாதிக் தொடர்பான வழக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் விழக்கில் ஜாஃபர் சாதித்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. இதற்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.