சென்னை: 300 நாட்களை கடந்து சிறையில் இருக்கும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம்,  மே 6ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

பண மோசடி தொடர்பான திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 320 நாட்களுக்கு மேலாக  சிறையில் உள்ளார். அவருக்கு மாவட்ட நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்கள் ஜாமின் வழங்க மறுத்து வருகிறது. இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமின் கோரி உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனுமீதான விசாரணை இன்று  (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பதில் மனுவில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை சார்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வாதாடிய செந்தில் பாலாஜி வழக்கறிஞர், அமலாக்கத் துறை தரப்பில் நேற்றிரவு தான் பதில் மனு தாக்கல் செய்தது என்றும்,  அமலாக்கத் துறை இந்த வழக்கை வேண்டும் என்றே தாமதப்படுத்த முயற்சிக்கிறது. நாங்கள் வாதங்களை முன்வைக்க தயாராக இருக்கிறோம்.” என்று வாதிட்டார்.

பின்னர் கால தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மன்னிப்பு கேட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “அமலாக்கத் துறை தாக்கல் செய்த பதில் மனுவை படிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.” என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைப்பதாக கூறினார்.

அப்போது குறுக்கிட்ட செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், “கொடுக்கல், வாங்கல் விஷயத்தை பண மோசடி என்று கட்டமைக்கிறது அமலாக்கத் துறை. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி 320 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். எனவே வழக்கை உடனே விசாரித்து செந்தில் பாலாஜிக்கான இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.

ஆனாலும், “வழக்கின் விசாரணையை மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.