சென்னை: தமிழ்நாடு உயர்த்திய அசையா சொத்துகளின் வழிகாட்டி மதிப்பை குறைத்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு ஜூன் மாதம் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழ்நாடு அரசு உயர்த்தி உத்தரவிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசின் சீராய்வு மனுவை ஜூன் மாதம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதுவரை, முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்கள் குறைக்கப்பட்ட மதிப்பிற்கு மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சொத்து வரி, மின்கட்டணம், பால்விலை உயர்வு என பல்வேறு வரிகளையும் உயர்த்தியது. அத்துடன், தமிழகத்தில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பையும் உயர்த்தியது. இது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், திமுக அரசு, பெண்களுக்கு இலவச பேருந்து, ரூ.1000 நிவாரணம் என பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு, வரி உயர்வு போன்றவற்றை மக்களின் மனதில் இருந்து அகற்றி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் சொத்து வழிகாட்டு விலை நிர்ணயம் செய்ய பத்திரப்பதிவுத்துறை தலைவர் தலைமையில் மதிப்பீட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதுகுறித்து, 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலத்தில், சொத்துகளின் விலை அதிகரித்துள்ளதால் வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், மதிப்பீட்டுக்குழு வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயம் செய்ய அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதால், தற்காலிக நடவடிக்கையாக 2017 ஜூன் 8 வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் புதிய மதிப்பீடு நிர்ணயிக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் சொத்துகளுக்கான புதிய வழிகாட்டி மதிப்பீடு 2023 ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு கடந்த மார்ச் 30-ல் சுற்றறிக்கை பிறப்பித்தது. வழிகாட்டி மதிப்பை அதிகரித்து தமிழக அரசு பிறப்பித்த இந்த சுற்றறிக்கையை எதிர்த்து இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தது.
அந்த மனுவில், சட்ட விதிகளின்படி சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பு குறித்து அரசு, எந்தவொரு கலந்தாலோசனையும் நடத்தாமல், பொதுமக்களின் கருத்துகளையும் கோராமல் தன்னிச்சையாக வழிகாட்டி மதிப்பை பல மடங்கு அதிகரித்து இருப்பது சட்டவிரோதமானது. 50 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தியிருப்பது என்பது தற்காலிகமான ஏற்பாடாகத் தெரியவில்லை என குற்றம் சாட்டியது.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.வேல்முருகன், தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்தார். அவரது உத்தரவில், சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை திருத்தி அமைக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சட்ட விதிகளின்படி துணைக்குழுக்களை அமைத்து, அறிக்கைகள் பெற்று, அவற்றை ஆய்வுசெய்து, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு அதன்பிறகே வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயிக்க முடியும். உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரித்து கடந்தாண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, இயற்கை நீதியை மீறும் செயல் என்பதால் அந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது. உரிய விதிகளைப் பின்பற்றி புதிதாக வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். அதுவரை 2017-ல் அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டை பின்பற்றவேண்டும் என உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வும், சொத்து வழிகாட்டி மதிப்பு தொடர்பாக தனி நீதிமன்ற நீதிபதியின், உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது
டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர் 50 பதிவு மாவட்டங்களுக்கும் 2012 இல் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளைப் பின்பற்றுவதற்கு அரசாங்கத்தை அனுமதித்தனர். மேலும் அசையா சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பை 33 சதவிகிதம் வரை குறைத்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சொத்து வழிகாட்டி மதிப்பு தொடர்பான தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மனுமீதான விசாரணை ஜூன் மாதம் விசாரிக்கப்பட உள்ளது. அதுவரை, முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்கள் குறைக்கப்பட்ட மதிப்பிற்கு மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.