சென்னை: “உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையே”  என தேர்தல் காரணமாக, எனது பள்ளிக்கூடத்தை குப்பையாக்கிட்டீங்களே’ என  தனது ஆதங்கத்தை வீடியோவாக  வெளியிட்ட குழந்தை மற்றும் அக்குழந்தையின் பெற்றோருக்கு, அப்பகுதி  கவுன்சிலர் உள்பட அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுத்தமாக இருக்க வேண்டும் என கூறும் அரசு, அதிகாரிகள், தங்களது பணியை முடித்துவிட்டு செல்லும்போது, தாங்கள் பணியாற்றும் பகுதிகளை சுத்தமாக வைக்கத் தவறியது அவர்களது குற்றம். இதை சுட்டிக்காட்டிய  ஐந்து சிறுமியின் வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், அப்பகுதி கவுன்சிலர்  மற்றும் கல்வித்துறை அதிகாரிகளும் அந்த குழந்தையையும், பெற்றோர்களையும் மிரட்டி உள்ளனர்.  இது பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 19ந்தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அப்போது, சென்னையின் முகப்பேறு பகுதியில் உள்ள அரசு பள்ளியிலும் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும், அந்த வகுப்பறை பேப்பர், டீகப், உணவு பொட்டலங்களால் போன்றவற்றால், தூய்மையற்று காணப்பட்டது. இதை கண்ட அங்கு படித்து வரும் 5வயது சிறுமி ( UKG மாணவி) அஹிம்சா என்பவர், தனது ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்டார்.

இந்த வீடியோ வைரலானது. இதைத்தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களையும், அதை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்தையும் கடுமையாக கழுவி ஊற்றினர். இது அதிகாரிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அந்த பகுதி கவுன்சிலர் திலகர் (முகப்பேர் 92வது வார்டு) மற்றும் அதிகாரிகள், வீடியோ பதிவிட்ட 5வயது சிறுமி மற்றும் பெற்றோரையும், பள்ளி ஆசிரியர்களையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதுபோல, கல்வித்துறை அதிகாரிகளும் அங்கு சென்று விசாரணை நடத்தியதுடன் சிறுமின் பெற்றோருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.  மேலும், ‘பள்ளி நிர்வாகத்தையும்  மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கூறிய  குழந்தையின் தாய் ரம்யா பாலா, “உடைந்த பலகைகள் கொண்ட வகுப்பறையால் என் குழந்தை மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால், நாங்கள் வீடியோ பதிவு செய்து பகிர்ந்துள்ளோம். ஆனால், கவுன்சிலரும், கல்வித்துறை அதிகாரிகளும் நாங்கள் அரசுக்கு எதிராக சதி செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர்” என்று குமுறினார்.

இதையடுத்து அந்த பள்ளிக்கூடம் சுத்தம் செய்யப்பட்டது. மாணவியின் பெற்றோர் தாங்கள் மிரட்டப்பட்டதாக கூறும்   குற்றச்சாட்டை கல்வி அதிகாரிகளும் கவுன்சிலர் கே.வி.திலகரும் மறுத்தனர். “சமூக ஊடகங்களில் பிரச்சினைகளை முன்வைக்கும்  முன் எனது கவனத்திற்கு கொண்டு வருமாறு பெற்றோரிடம் நான் கேட்டுக் கொண்டது உண்மைதான், நான் யாரையும் அச்சுறுத்தவில்லை” என்று கவுன்சிலர் கூறினார்.