சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதைபொருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், அடுத்தடுத்து பல இடங்களில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  சென்னை விமான நிலையத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ரூ.28 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்ட நிலையில், நேற்று   ரூ.35 கோடி மதிப்பிலான  கோகைன் எனப்படும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் திமுக நிர்வாகியான ஜாபர் ஜாதிக், உணவுப்பொருள்களுடன் போதைப்பொருளையும் சேர்த்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜாபர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டு, விசாரணை வளையத்தில் உள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் போதைபொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி,  மாநிலத்தின் பல பகுதிகளில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதேவேளையில், கடந்த சில  வாரங்களாகவே சென்னை விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் போதை பொருட்கள் சென்னை வழியாக பல்வேறு மாநிலங்களுக்கும் கடத்தப்படுகின்றன. அந்த வகையில் ஏப்ரல் 25ந்தேதி  சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று காலை சென்னை சர்வதேச விமானநிலையத்தில் ஏர் ஏசியா பயணிகள் விமானம் தரையிறங்கியது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னை வந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பயணியை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதை தொடர்ந்து அதிகாரிகள் அவரிடன் உடைமைகளை சோதனை செய்த போது, அவரின் பைக்குள் கொக்கைன் போதைப் பொருள் பார்சல் இருந்துள்ளது.

அந்த பார்சலில் 3.5 கிலோ மதிப்புள்ள கொக்கைன் போதை பொருள் இருந்துள்ளது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.35 கோடி என்று கூறப்படுகிறது. அந்த நபரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக அந்த நபர் சென்னைக்கு அந்த போதை பொருளை கடத்தி வந்துள்ளார்?

அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. அந்த பயணி சர்வதேச போதை பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் இதுகுறித்து மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில்  ஏப்ரல் 24ந்தேதி  ரூ.28 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்றும் ரூ.35 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில், அதாவது கடந்த மார்ச் 10 -ஆம் தேதி 110 கோடி ரூபாய் மதிப்புடைய 100 கிலோ எடை கொண்ட ஹசீஸ் மற்றும் ஒன்று புள்ளி ஐந்து இலட்சம்  மதிப்புடைய 872 கிலோ கஞ்சா , புதுக்கோட்டை மாவட்டம் அரசங்கரை கடற்கரை பகுதியில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கு கஞ்சா உள்பட போதை பொருளை பதுக்கி வைத்திருந்த பண்ணை உரிமையாளர் முகமது சுல்தான் என்பவர் தலைமறைவான நிலையில், அவரை போதை பொருள் தடுப்பு துறை கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள் விற்பனை கும்பலுக்கு உடந்தை! 22 சென்னை போலீசார்மீது நடவடிக்கை…

சென்னையில் ஜோராக நடைபெறும் போதைபொருள் விற்பனை: ஒரு வாரத்தில் 40 பேர் கைது….