சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை மிரட்டி,  ரூ.24ஆயிரம் லஞ்சம் வாங்கிய 3 காவலர்கள்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இது  சம்பவம் சென்னையின் புறநகர் பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 84 பேர் கைது செய்யப்பட்டனர். புகையிலை பொருட்கள் கடத்தல், பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 பேர் கைதாகினர் என மாநகர காவல்துறை தெரிவித்து உள்ளது. இருந்தாலும் சென்னை வாசிகளிடையே போதைப்பொருள், மது நடமாட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பள்ளி குழந்தைகள் கூட போதைக்கு அடிமையாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதை தடுக்க வேண்டிய காவல்துறையினர், திரைமறைவாக விற்பனை செய்யப்படும், மது, போதை பொருட்கள் தடுக்காமல்,  மாமுல் வாங்கிக்கொண்டு புழங்க விடுகின்றனர். இதனால் குடிகாரர்கள், போதைக்கு அடிமையாவோர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்  சென்னையை அடுத்த மணிமங்கலத்தில், மகாவீர் ஜெயந்தி அன்று (21ந்தேதி ஞாயிற்றுக்கிழமை) சட்டவிரோதமாக மது விற்ற நபரை மிரட்டி 24 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில், 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  காவலர்களான, சங்கர், கணேஷ் சிங், ஆனந்தராஜ்  ஆகியோர்மீது இதுபோன்ற  பல புகார்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.