டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

ராஜஸ்தானில் ஞாயிறன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை “அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றவர்கள்” என்று அவர் குறிப்பிட்டார் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (2006 இல்) “நாட்டின் வளங்களில் முதல் உரிமை முஸ்லிம்களுக்கு தான்” என்று கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

2024ல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துக்களை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்க அதன் தேர்தல் அறிக்கை முன்மொழிகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

தேர்தல் அறிக்கையில் உள்ள சொத்து சமத்துவமின்மையை நிவர்த்தி செய்யும் பகுதிகளை இணைத்து, 2006ல் முன்னாள் பிரதமரின் உரையுடன் அந்த புள்ளிகளை இணைத்து மோடி இவ்வாறு பேசியுள்ளார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு மத உணர்வுகளை தூண்டும் விதமாக பேசிவரும் பிரதமர் மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

அவர்களின் இந்த கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஒரு கமெண்டும் செய்யாமல் வாயை மூடி இருக்கும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இறந்துவிட்டதாக டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.