திருவனந்தபுரம்

இந்தியா கூட்டணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை  அதே கூட்டணி தலைவர் பினராயி விஜயன் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

கடந்த 19 ஆ தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தொடர்ந்து, ஏப்ரல் 26-ஆம் தேதி 2-ஆவது கட்ட தேர்தலும், மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது.

இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் செய்தியாளர்களிடம்

”நாட்டில் பல தீவிர அரசியல் முன்னேற்ற விசயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி இந்தியாவில் இருப்பது இல்லை. அவர் ஒரு தீவிர அரசியல்வாதி இல்லை. இதுவே நாட்டிலுள்ள மக்களின் அனுபவம். இதுபற்றி நாம் விமர்சிப்பதில் இருந்து விலகியே இருக்கிறோம்.

ஏனெனில், அவர் வேறொரு கட்சியில் இருந்து வந்தவர். அது அவர்களுடைய உள்கட்சி விவகாரம். ஆனால், பொதுத் தேர்தல் நடக்கக் கூடிய நேரமிது. இந்த தருணத்தில், அவர் கேரளாவுக்கு வந்து மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்து இருப்பது அவர் பக்குவமற்றவர் எனக் காட்டுகிறது ”

எனக் கூறியுள்ளார்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து, இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணியில் இருந்தாலும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராகப் பேசுவதும், பினராயிக்கு எதிராகக் காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.