சென்னை:  மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  தேர்தலில் வெற்றிபெற்று தெலுங்குதேசம் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் வழங்கப்படும் என்றும் , மாதம் ரு.4000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பதவி ஏற்றதும், தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் அறிவிப்பை வெளியிட்டு அமல்படுத்தினார். இதற்கு பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, மற்ற மாநிலங்களிலும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில், தற்போது ஆந்திராவிலும் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது பிறந்த நாளை திருப்பதி அடுத்த கூடூரில் கொண்டாடினார். அப்போது தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதன்படி, தெலுங்கு தேசம் கட்சி எப்போதும் பெண்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் முறையான தரமான கல்வி வழங்கப்படும்.

ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவசமாக பயண திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், தகுதியுள்ள அனைத்து பெண் பயனாளிகளுக்கும் மாதந்தோறும் முதல் தேதியில் ரூ.4 ஆயிரம் வீட்டிலேயே நேரடியாக வழங்கப்படும் என்றவர், மகா சக்தி திட்டத்தின் மூலம் பெண்களை நாட்டிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றப்படுவார்கள் என்றார்.

தொடர்ந்து பேசியவர், முதல்மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சமூகத்தில் அனைத்து பிரிவினரையும் ஏமாற்றிவிட்டார் என்றும்,  வருகிற 2029-ல் நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றத் திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும். அப்போது பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

தனது ஆட்சியில் மஞ்சள், குங்குமம் திட்டத்தில் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் பெண் ஒருவர்தான் நிதி அமைச்சராக இருக்கிறார். அதேபோல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெண்கள் தான் நிதி அமைச்சர். ஏழைகள் மற்றும் தெலுங்கு சமூகத்தின் மேம்பாட்டிற்காக எப்போதும் தனது நேரத்தை செலவிடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

[youtube-feed feed=1]