ஐதராபாத்: கடந்த ஆண்டு ஆந்திரா விஜியநகரம் பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்தில், 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம், ரயில் பெட்டிகளில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், ரயில் பெட்டிகளில் உள்ள பிரத்தியேக பிரேக்கிங் சிஸ்டம் செயல்படவில்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு, ரயிலின் ஓட்டுநர் போனில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தது தான் காரணம் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்த நிலையில், தற்போது ரயில் பெட்டியில் உள்ள பிரேக்கிடங் சிஸ்டம் செயல்படாததுதான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே மோடி ஆட்சியில், சாமானிய மக்களின் வரவேற்பை பெற்ற ரயில்வேதுறை சீரழிந்து வருவதாகவும், முறையான பராமரிப்புகள், மற்றும் வசதிகள் செய்யப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் இறுதியில் ஆந்திர மாநிலம் விஜயநகர் பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்தில் 17 பேர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த ரயில் விபத்துக்கு காரணம், மத்திய பாஜக அரசின் மெத்தனம் என்பது தெரிய வந்துள்ளது. ரயில் பெட்டிகளில் போதுமான பாதுகாப்பு செய்யப்படவில்லை என்றும், ரயில் பெட்டிகளில் இருக்க வேண்டிய பிரத்தியேக பிரேக்கிங் சிஸ்டம் செயல்படடவில்லை என்பதும், இதுதொடர்பாக ஆய்வு நடத்திய வல்லுநர் குழு குற்றம் சாட்டி உள்ளது.
ஆந்திராவில் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி விஜயநகர் மாவட்டத்தில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த ராயகடா பயணிகள் ரயில் நின்று கொண்டிருந்தது. ரயில் பாதையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்ததால் அந்த ரயில் அங்கே நின்று கொண்டிருந்தது. இதனால் ரயில்வே ஊழியர்கள் பிரச்னையை சீராக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த பலசா விரைவு ரயில், எதிர்பாராத விதமாக பயணிகள் ரயில் மீது மோதியது.
இந்த பயங்கர விபத்தில், 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு பல பயணிகள் ரயில் பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டனர். இதில், ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த பகுதியில் தீயணைப்புப் படை, பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட வீரர்கள் கடும் போராட்டத்திற்குப் பின் சிக்கியவர்களை மீட்டனர்.
இதையடுத்து, ரயில் விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் இருவரும் கவனக்குறைவாக இருந்ததால்தான் ரயில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது, ரயில்வே விதிகளின்படி பழுதடைந்த தானியங்கி சிக்னல்களில் ரயில் இரண்டு நிமிடங்கள் நின்று, பின் 10 கி.மீ வேகத்தில்தான் புறப்பட வேண்டும். ஆனால் இதை ராயகடா ரயில் பின்பற்றதாததால்தான் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரயிலை இயக்கிய ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் இருவரும் கிரிக்கெட் மேட்சைப் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரயிலை இயக்கிய இருவரும் கிரிக்கெட் மேட்சைப் பார்த்துக் கொண்டிருந்ததால், இரண்டு சிக்னல்கள் பழுதாக இருந்ததை கவனிக்காமல் வேகமாக ரயிலை இயக்கியதாகவும், அதனால்தான் கட்டுப்பாட்டை மீறி ரயில் மோதியது எனவும் தெரிவித்துள்ளர். மேலும் விபத்து குறித்த விரிவான அறிக்கையை ரயில்வே போலீசார், மக்கள் முன் தாக்கல் செய்வார்கள் எனவும் அவர் கூறினார்.
இந்த விபத்து தொடர்பாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் குழு, விபத்துக்குள்ளான ரயில் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், ரயிலில் உள்ள பிரேக்கிங் சிஸ்டம் சரியான வேலை செய்யவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளது.
ஆனால், சிஎஸ்ஆர் அறிக்கையில், இதுதொடர்பாக ஆதாரங்கள் அழிக்கப்பட்டன, சிதைக்கப்பட்டன மற்றும் திருடப்பட்டதாக சிஎஸ்ஆர் குறிப்பிடப்பட்டு உள்ளது. மோதலுக்கு முதன்மைக் காரணம் லோகோ பைலட் ஓவர்ஷூட்டிங் சிக்னலாகும், உதவியாளர் பிரேக்கைப் பயன்படுத்தத் தவறிவிட்டார்; மாற்றியமைக்கப்பட்ட பெட்டிகள் தொலைநோக்கி எதிர்ப்பு அம்சங்களின் தோல்வியை ஏற்படுத்தியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.