சென்னை

சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் சென்னை திரும்பி வந்ததால் தாம்பரத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் நாடாளுமன்றத் தேர்தலுடன், சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் தேர்தலில் வாக்களிப்பதற்காகச் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். தேர்தலில் வாக்களித்துவிட்டு, 3 நாள் விடுமுறை முடிந்து நேற்று மாலை முதலே பலரும் கார் மற்றும் பேருந்துகளில் மீண்டும் சென்னைக்குத் திரும்பி வந்தனர்.

இதையொட்டி தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. எனவே பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

நேற்று இரவு சொந்த ஊர்களிலிருந்து புறப்பட்ட மக்கள், இன்று காலை சென்னை வந்தடைந்தனர். எனவே கிளாம்பாக்கம், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.  இதில் குறிப்பாகப் பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் தாம்பரம் வந்த மக்கள், தங்களுடைய இருப்பிடங்களுக்குச் செல்வதற்காக தாம்பரம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

தாம்பரம் பேருந்து நிலையம் வழக்கத்தை விடக் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசலும் உள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.