திருவனந்தபுரம்

முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது தேர்தல் பிரசார உரையில் பாஜகவை சாடி உள்ளார்.

 நேற்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில்,

“பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் 14 நாட்களில் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதற்கு தலைப்பே இல்லை. மோடியின் வாக்குறுதிகள் என்று தான் அவர்கள் அழைக்கிறார்கள். தற்போது பாஜக அரசியல் கட்சியாக இல்லாமல் மோடியை வணங்கும் வழிபாட்டு முறையாக மாறி விட்டது.  பிரதமர் மோடியின் வாக்குறுதி, தலைவர்களை வழிபடும் நாடுகளைத்தான் நினைவுபடுத்துகிறது. 

ஆனால் இந்தியாவில் அந்த வழிபாட்டு முறைகள் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும். மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. மோடி 3 ஆவது முறையாக ஆட்சிக்கு வந்தால், அவர் அரசியல் சாசனத்தை திருத்தக்கூடும். ஆகவே ஜனநாயகத்தை நாம் பாதுகாக்க வேண்டும். 

இந்தியா தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகும். எனவே வேலை உருவாக்கம் மற்றும் சொத்து உருவாக்கம் குறித்து காங்கிரசின் தேர்தல் அறிக்கை பேசுகிறது.

இந்தியா கூட்டணிக் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரிலேயே குடியுரிமை திருத்தச்சட்டம் திரும்பப் பெறப்படும்.

தற்போதைய தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 இடங்களிலும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும்”

என்று கூறி உள்ளார்.