சென்னை: தமிழ்நாட்டில் நாளை மறுதினம் (19ந்தேதி வெள்ளிக்கிழமை) மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதையடுத்து, தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
18வது மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ந்தேதி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு உள்பட 22 மாநிலங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று இறுதிநாள் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் 39 மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதாவது, வாக்குப் பதிவு நிறைவடையும் தேதிக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் முடிவடையும்.
வாக்குப்பதிவு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. காலை 7மணி முதல் மாலை 6மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரசாரம் ஓய்வுபெறுவதை யொட்டி, அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது.
இன்று மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது.
பிரசாரம் நிறைவடைந்த பின், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த கூடாது
தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரை செய்ய கூடாது
விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும்
வாக்காளர் அல்லாதவர்கள் நாளை மாலை 6 மணிக்கு மேல் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்
தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் யாரும் தங்க கூடாது
ஓட்டல்கள், விடுதிகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்று நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
பிரசாரம் ஓய்ந்த பிறகு அமைதியாக இருக்கும் காலத்தில் எந்த வகையிலும் யாரும் வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபடக் கூடாது.
வாக்காளா்கள் ஏதேனும் புகாா் தெரிவிக்க விரும்பினால், 1950 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.
இந்த எண்ணுக்கு முன்னதாக மாவட்டத்துக்கான ‘எஸ்டிடி’ தொலைபேசி எண்ணைப் பதிவிட்டு அழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலையொட்டி, இந்தமுறை 4 முனை போட்டி நிலவி வருகிறது. களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் 609 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ஆளும் திமுக சார்பில் 23, அதிமுக 34, பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 39, பாமக சார்பில் 10 பேர், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 12 பேர் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவுக்காக தமிழகத்தில் மொத்தம் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியபட்டு உள்ளது. இவற்றுள் 181 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.
மேலும், பதற்றமான ஓட்டு சாவடிகளுக்கு, வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாகேவே துணை ராணுவம் அனுப்பி வைக்கப்படும். மேலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்து வது உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில், மாநிலம் முழுவதும் 6.23கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க தயாராக உள்ளது. இவர்களில், 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளர் கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் உள்ளனர். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 4 லட்சத்து 61 ஆயிரத்து 771 பேரு உள்ளனர்.
இந்தத் தோ்தலில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 100 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 82,014 கட்டுப்பாட்டு கருவிகளும், 88,783 விவிபேட் (வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம்) இயந்திரங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் தொடர்பாக, சி-விஜில் செயலிக்கு 4,169 புகாா்கள் வந்தன. அவற்றில் 3,350 புகாா்கள் தீா்க்கப்பட்டுள்ளன. 383 புகாா்களுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் கைவிடப்பட்டன. 34 மட்டுமே தீா்க்கப்படாமல் உள்ளன.
‘பூத் ஸ்லிப்’ எனப்படும் வாக்குச்சாவடி அடையாளச் சீட்டுகள் கடந்த 1-ஆம் தேதிமுதல் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டன. இதுவரையில் 92.80 சதவீதம் வாக்குச்சாவடி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சீட்டுகள் உடனே வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பூத் சிலிப் கிடைக்காதவர்கள், Voter Helpline App மூலமும் பூத் சிலிப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் தங்களது வாக்குகளைச் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களின் வசதிக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரெய்லி வசதி உள்ளது. அதன்மூலம், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைந்தபிறகு கடைபிடிக்க வேண்டியது தொடர்பாக அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.