சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை செல்லும் ரயிலில் கைப்பற்றப்பட்ட செய்யப்பட்ட ரூ. 4 கோடி நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்த மான பணம் என்று காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும், இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
கடந்த 6 ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் ரயிலில் செல்லும் வகையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தாம்பரம் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பணத்தை எடுத்துச்சென்ற புரசைவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் காவல்துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள், நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியானது.
இதை தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல், உறவினர் வீடுகளில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் இந்த வழக்கின் அடிப்படையில் பாஜக பிரமுகரான கோவர்தன் என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் சோதனை நடத்தியதில் ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகியுள்ளது. அதில், ‘பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம். வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாக கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு’, தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். . நயினார் வீட்டில் இல்லாததால் அவருடைய உறவினரிடம் அந்த சம்மன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் பணத்துக்கு நான் பொறுப்பாக முடியாது. எனக்கு வேண்டப்பட்டவர்கள் திமுகவிலும் உள்ளனர். பணத்தை அவர்கள் தொழிலுக்காக கொண்டு சென்றிருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியவில்லை. எனக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் எங்கும் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை, என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.