சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் மீன்பிடி தடை காலம் தொடங்கி உள்ளதால், மீன்கள் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 1,076 கிமீ நீளமுள்ள கடற்கரைகளைக் கொண்டுள்ளது மற்றும் கடல் மீன் உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகும். இந்த தடை காலம், கடந்த 2017 முதல், 45 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. இந்த தடை காலம், ஏப்ரல் 15ந்தேதி ஜூன் 14ஆம் தேதி வரை 60 நாட்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த காலம் தான் மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் அதற்கு பிரச்னை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆண்டாண்டு காலமாக இதுபோன்ற தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடை காலத்தில் விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கரையோரங்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த மீன்பிடி தடைகாலம் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையுள்ள கடல் பகுதியில் நேற்று (ஏப்.14) நள்ளிரவு முதல் ஜூன் 14-ந் தேதி வரை 60 நாட்கள் (அதாவது இரண்ட மாதங்கள்) விசைப்படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சென்னை காசிமேடு துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஆழ்கடலில் பிடித்து வரப்படும் மீன்கள் 2 மாதத்திற்கு தமிழகத்தில் கிடைக்காது.b விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் மீன்வரத்து படிப்படியாக குறையும்.
இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தங்கள் மீன் பிடி உபகரணங்களையும் சீரமைப்பார்கள்.
அதே நேரத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் வழக்கம் போல் மார்க்கெட்டுகளுக்கு வரும். மீன் பிடி தடைக்காலம் தொடங்கிய பின்னர் மார்க்கெட்டுகளில் மீன் வரத்து குறையும். எனவே மீன்விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.