சென்னை: திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது, தேர்தல் விளம்பரம் செய்ய அனுமதி கோரிய திமுகவின் விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “சாதாரண கருத்துக்களை கூறி விளம்பரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. மேலும், திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதற்கு 6 நாட்கள் வரை தாமதம் ஆகிறது. இதனால், விளம்பரத்துக்கு அனுமதி தராதது தேர்தல் ஆணையத்தின் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையை கேள்விக்குறியாகியுள்ளது. திமுகவின் மனு மீது இரண்டு நாட்களில் பரிசீலித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். மேலும் திமுகவின் விண்ணப்பத்தை நிராகரித்த தமிழக தேர்தல் அதிகாரியின் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை வரும் 15) விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.