சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை முதல் 2 நாட்கள் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அப்போது பல இடங்களில் ரோடு ஷோ நடத்துகிறார்.
நாட்டின் 18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் முற்கட்ட பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் 609 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில், ஆளும் திமுக சார்பில் 23, அதிமுக 34, பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 39, பாமக சார்பில் 10 பேர், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 12 பேர் களத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, மற்றும் நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே, பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய செயலாளர் நட்டா உள்பட பல தலைவர்கள் தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தருகிறார்.
தேர்தல் பிரசாரத்திற்காக நாளை (ஏப்ரல் 12 ந்தேதி) தமிழகம் வரும் அமித் ஷா பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகன பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 3.05 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் சிவகங்கை செல்கிறார்.
சிவகங்கையில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தேவநாதன் யாதவுக்கு ஆதரவாக, வாகனப் பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். இந்த வாகனப் பேரணி ஒரு மணிநேரம் நடைபெறுகிறது.
அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் செல்லும் அவர், கோட்டை பைரவர் கோயில் மற்றும் சத்தியவாகீஸ்வரர் கோயிலில் மாலை 5 மணிக்கு சாமி தரிசனம் செய்கிறார். அதையடத்து,
மாலை 6 மணிக்கு மதுரை செல்கிறார். அங்கு பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக 2 கிலோ மீட்டர் தூரம் வாகனப் பேரணி மேற்கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
நாளை இரவு மதுரையில் தங்கும் அவர், நாளை மறுதினம் (13ந்தேதி) சனிக்கிழமை காலை 8 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் தக்கலை செல்கிறார்.
தக்கலையில் காலை 9.50 மணிக்கு கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாகனப் பேரணி நடத்துகிறார்.
அதன்பிறகு, திருவனந்தபுரத்துக்கு திரும்பி அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருச்சி வந்து, திருவாரூர் செல்கிறார்.
நாகையில் மதியம் 3 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, நாகை தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம். ரமேசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.
பின்னர், தென்காசி மாவட்டம் இலஞ்சி செல்கிறார்.
அங்கு புதிய பேருந்து நிலையம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் வாகனப் பேரணியில் பங்கேற்று தென்காசி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
அதன்பிறகு, டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
அமித்ஷா ஏற்கனவே ஏப்ரல் 4 மற்றும் 4ந்தேதி தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.