சென்னை: பிரதமர் மோடியின் சென்னை ரோடு ஷோ நிகழ்ச்சியில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக தி.நகர் காவல்நிலையதில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் அதிகாரிகள் இந்த புகாரை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி, நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை), சென்னையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். பிரதமரின் வாகன பேரணிக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, பிரதமர் மோடி எதுவும் பேசாமல் பேரணியில், பாஜகவின் தாமரை சின்னத்தை காட்டி வாக்கு சேகரித்தார்.  இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், தமிழக காவல்துறையின்  கட்டுப்பாடுகள் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பிரதமர் பேணியில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக சென்னை பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  பிரதமர் மோடி, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பனகல் பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணியில் கலந்து கொண்டார். இந்தப் பேரணியின்போது, பாஜகவினர் விதிகளை மீறி சாலைகளில் விளம்பர பதாகைகள் வைக்த்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் மாம்பலம், பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.