மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் அணி 21 இடங்களிலும், என்சிபி எஸ்சிபி 10 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
48 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ந்தேதியும், 2வது கட்ட தேர்தல், ஏப்ரல் 26ந்தேதியும், 3வது கட்ட தேர்தல் மே 7ந்தேதியும், 4வது கட்ட தேர்தல் மே 13ந்தேதியும், 5வது கட்ட தேர்தல், மே 20ந்தேதியும் நடைபெற உள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த “இந்தியா” கூட்டணி உருவாக்கப்பட்டது. 28 கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணியில் இதுவரை பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்பட வில்லை. சில மாநிலங்களில் கூட்டணி கட்சிகளிடையே மக்களவை தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து, தேர்தல் முடிந்த பிறகு முடிவு செய்வோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், இந்தியா கூட்டணியான மகா விகாஸ் அகாடியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி), காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார்) ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அதுபோல சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாரதிய ஜனதா கட்சி மற்றும் அஜித் பவாரின் என்சிபி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே பாஜகா ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கு இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான இந்தியா கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் “இந்தியா” கூட்டணி கட்சிகளிடையே தொடக்கத்தில் கருத்து வேறுபாடு எழுந்து வந்த நிலையில், தற்போது உடன்பாடு எட்டியுள்ளது.
அதன்படி, மொத்தமுள்ள 48 தொகுதிகளில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) 21 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) 10 இடங்களிலும் போட்டியிடுகிறது.