டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு துணைத்தலைவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் 56 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த தேர்தலில் போட்டியிடும்வேட்பாளர்களை தேசிய கட்சிகள் மற்றம் மாநில கட்சிகள் அறிவித்தன. காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ராஜஸ்தானில் இருந்துபோட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதுபோல பாஜக சார்பில், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், எல்.முருகன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பெயர்களும் அறிவிக்கப்பட்டன. இவர்களில், சோனியா காந்தி, ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுபோல, குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உடள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து, மத்திய அமைச்சர் எல்.முருகன் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று சோனியா காந்தி ராஜ்யசபா எம்.பி.யாக பதவி ஏற்றார். அவருக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெக்தீப் தன்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சோனியா காந்தியுடன் மேலும் பலர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உடன் இருந்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த சோனியா காந்தி, கடந்த ஆண்டு உடல்நிலையை கருத்தில்கொண்டு, கட்சி தலைவர் பதவியை விட்டு விலகிய நிலையில், மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்தார். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வலியுறுத்தல் காரணமாக, தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு, 5 முறை மக்களவை உறுப்பினராக இருந்த சோனியா, தற்போது முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகி உள்ளார்.