கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் பேச தனியார் நிறுவனத்திடம் பணம் பெற்றதால் பதவி இழந்த  மம்தா கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.  மஹுவா மொய்த்ரா  பணமோசடி  செய்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது.

மேற்குவங்கத்தை ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்  மக்களவை எம்.பி.யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் நாடாளுமன்றத்தில் அழகாகவும், ஆவேசமாக பேசுவதில் வல்லவர். இவரது பேச்சு அனைத்தும், பிரதமர் மோடி, அதானி தொடர்பாகவே இருந்து வந்தது. இது வியப்பை ஏற்படுத்திய நிலையில்,  மஹுவா மொய்த்ரா தனியார் நிறுவனம் ஒன்றிடம் பணம் பெற்றுக்கொண்டு, மக்களுக்காக பேசுவதுபோல பேசி வந்தது தெரிய வந்தது. இந்த உண்மையை மஹுவா மொய்த்ரா காதலர் அம்பலப்படுத்தினார்.

அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகளை கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் தூபே புகார் அளித்தார். இதன் அடிப்படையில் பாராளுமன்ற மக்களவை நன்னடத்தை குழு விசாரணை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் 2023  டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

மேலும், இந்த புகார் தொடர்பாக சிபிஐ-யும் வழக்குப்பதிவு செய்து அவரது இல்லத்தில் சோதனை நடத்தியது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு சிபிஐ சார்பில் சம்மனும் அனுப்பப்பட்டது. ஆனால், மஹுவா மொய்த்ரா நான் தவறாக ஏதும் செய்யவில்லை என தொடர்ந்து கூறி, அந்த சம்மனை நிராகரித்தார். இதனால் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.  இந்த வழக்கில் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், மஹுவா மொய்த்ரா மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில், கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். தனது வெற்றியே,  தனது எம்பி-பதவியை பறித்த பாஜகவின் சதி மற்றும் சிபிஐ சோதனை, சம்மன்களுக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் என   தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.