டில்லி

பாஜக மீது கெஜ்ரிவால் கைதால் உலக அளவில் கடும் விமர்சனம் எழுந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

ராம்லீலா மைதானத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அகிலேஷ் யாதவ் தனது உரையில்,

“புலன் விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி நன்கொடை வசூலிப்பது பா.ஜ.க.வின் புதிய கண்டுபிடிப்பாகும்.  தனது ஊழலைப் பற்றி பா.ஜ.க. எதுவும் பேசப்போவதில்லை. இதுவரை யாரும் பா.ஜ.க.வைப் போல் பொய்களைச் சொன்னதில்லை.

பா ஜ க தான் ஆட்சியில் இருந்து போகப்போவதை நினைத்து. கவலை கொண்டுள்ளது. இந்தியா கூட்டணியினர் அனைவரும் இன்று டில்லிக்கு வந்துள்ள சமயத்தில், பிரதமர் மோடி டில்லியை விட்டு செல்கிறார்.  இதன் மூலம் டில்லிக்கு யார் வரப்போகிறார்கள், டில்லியை விட்டு யார் போகப்போகிறார்கள் என்பது இன்றே தெரிந்துவிட்டது. 

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு உலக அளவில் பா.ஜ.க கடும். விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த கைது நடவடிக்கையால் அரசாங்கம் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தெளிவாகிவிட்டது.” 

என்று கூறியுள்ளார்.