2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கொடியை ஏந்திச் செல்ல இருக்கும் சரத் கமல் “அதிக பரிச்சயம் இல்லாத விளையாட்டு வீரர்” என்று தமிழ்நாடு தடகள சங்கம் (TNAA) தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு TNAA அனுப்பியுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இந்திய கொடியை ஏந்திச் செல்லும் அளவிற்கு சரத் கமல் எந்த வகையில் சிறந்த விளையாட்டு வீரர் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தற்போதைய ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவறும் 130 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரரான நீரஜ் சோப்ராவை விட்டு சரத் கமலிடம் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து விமர்சித்துள்ள தமிழ்நாடு தடகள சங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

புகழ்பெற்ற டேபிள் டென்னிஸ் வீரரான, ஷரத் கமல், இந்த மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் ஸ்மாஷின் காலிறுதிக்கு வந்த முதல் இந்தியர் ஆனார், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஏழு தங்கப் பதக்கங்கள் உட்பட பத்து தேசிய சாம்பியன்ஷிப் பட்டங்களையும் 13 பதக்கங்களையும் வென்ற சாதனையைப் படைத்துள்ளார்.

41 வயதான அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு பதக்கங்களைப் பெற்றார் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் மூன்று முறை வெண்கலப் பதக்கம் வென்றவர்.

சிறந்த தரவரிசையின் அடிப்படையில் இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய ஆண்கள் அணி தகுதி பெறுவதில் சரத் கமல் முக்கிய பங்கு வகித்தார்.

இருந்தபோதும் தடகள வீரரான நீரஜ் சோப்ராவை புறம்தள்ளிவிட்டு சரத் கமலை தேர்வு செய்தது குறித்து விமர்சித்துள்ள TNAA, கொடி ஏந்தி செல்பவரை அறிவிப்பதில் என்ன அவசரம் மற்றும் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஒருவரை புறக்கணிக்க காரணம் என்ன ? கொடி ஏந்தி செல்பவரின் பெயரை அறிவிப்பதில் தேவையில்லாத அவசரம் ஏன் என்பதை இந்திய ஒலிம்பிக் சங்கம் விளக்க வேண்டும்,” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.