சென்னை: ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்… சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக திமுகவுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி விட்டு சமூகநீதி குறித்து பாமகவுக்கு மு.க.ஸ்டாலின் பாடம் நடத்தட்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகி யோரை அறிமுகப்படுத்தி, பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, பாஜக என்பது சமூக நீதிக்குச் சவக்குழி தோண்டும் கட்சி. சமத்துவம் என்றால், கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி. நம்முடைய நாட்டை மத, இன, சாதி, மொழி அடிப்படையில் பிளவுபடுத்திக் குளிர்காய வேண்டும் என்று நினைக்கும் கட்சிதான் பாஜக. அப்படிப்பட்ட, பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை, சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் உண்டு. ஆனால், நான் பெரிதும் மதிக்கும் சமூக நீதி பேசும் டாக்டர் ராமதாஸ் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும்.
சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் சமூகநீதி பேசும் ராமதாஸ் எப்படி கூட்டணி வைத்தார் என்பது, ஏதோ தங்கமலை ரகசியமெல்லாம் கிடையாது. இந்த தருமபுரி மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் ஏன் மனதில்லாமல் அங்குச் சென்றிருக்கிறார் என்று உங்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் கட்சியினருக்கும் தெளிவாகத் தெரியும். இதற்குமேல் நான் விளக்கமாகச் சொல்ல விரும்பவில்லை.
வன்னியர் சமுதாய மக்கள் 1987-ம் ஆண்டை மறந்திருக்க மாட்டார்கள். தனி இடஒதுக்கீடு கேட்டுக் கடுமையான போராட்டம் நடந்த ஆண்டு அது. ஆனால், அதிமுக ஆட்சியில் தனி இடஒதுக்கீடு கொடுக்கவில்லை. மறைந்த முதல்வர் கருணாநிதி 1989-ம் ஆண்டு முதல்வரானதும், ஆட்சிக்கு வந்த 43-வது நாளில் வன்னியர் சமூகம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை கொடுத்தார். இந்த முப்பதாண்டு காலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய இடஒதுக்கீடுதான் அது.
வன்னியர் சங்கத்தினர் மேல் போடப்பட்டிருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றார். 1987-ம் ஆண்டு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேர் குடும்பத்துக்கு, மூன்று லட்சம் ரூபாய் கருணைத் தொகை கொடுத்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி. இன்றைக்கும் அந்தக் குடும்பங்கள் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெறுகிறார்கள் என்று சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை நரேந்திர மோடி அவர்களிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறதா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வினா எழுப்பியிருக்கிறார்.
மண்டல் ஆணையத்தின் அறிக்கையை பத்தாண்டுகள் கிடப்பிலும், அதற்கு முந்தைய காகா கலேல்கர் ஆணைய அறிக்கையை குப்பைத் தொட்டியிலும் போட்டு வைத்திருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசிடமிருந்தே, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்த இந்த இராமதாசுவால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் வலிமையாக இருக்கும் போது, சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்க முடியும்.
தமிழ்நாட்டில் சமூகநீதிச் செடிக்கு வெந்நீர் ஊற்றி அழித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு இதுகுறித்த கவலை கிஞ்சிற்றும் தேவையில்லை.
தருமபுரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசும் போது தான், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வன்னியர்கள் மீதும், சமூகநீதி குறித்தும் திடீர் அக்கறை பிறந்திருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் ஏதேனும் வாக்குறுதி பெற்றிருக்கிறாரா? என்று வினா எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டை ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் திமுகவை வழிநடத்திச் செல்லும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இப்படி வினா எழுப்பும் அளவுக்குத் தான் அரசியல் புரிதல் இருப்பது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் திமுக 6 முறையும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தான் ஆட்சி அமைத்திருக்கிறது. அப்போதெல்லாம் கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்றித் தருவோம் என்று கூட்டணி கட்சிகளுக்கு உத்தரவாதம் அளித்ததா?
5 முறை தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மத்திய அரசில் அங்கம் வகித்தது. அந்த 5 முறையும் திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் தொடர்பாக காங்கிரசிடமிருந்தும், பாரதிய ஜனதாவிடமிருந்தும் உத்தரவாதம் பெற்றதா? என எனக்குத் தெரியவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் போது, தேர்தலுக்குப் பிறகு மத்தியில் தேசியக் கட்சி ஆட்சி அமைக்க மாநிலக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் போது, மாநிலக் கட்சிகள் முதன்மைக் கோரிக்கைகளை முன்வைக்கும். அவற்றை உள்ளடக்கிய குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் உருவாக்கப்பட்டு, அதனடிப்படையில் தான் மத்திய அரசு செயல்படும். இது தான் இயல்பு. முதலமைச்சர் அளவுக்கு உயர்ந்துவிட்ட தம்பி மு.க.ஸ்டாலினுக்கு இது தெரியாதது வருத்தமளிக்கிறது.
2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, பாட்டாளி மக்கள் கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. மன்மோகன்சிங் தலைமையிலான அரசுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்ட போது, கூட்டணி கட்சிகளின் கொள்கை சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் உருவாக்கப்பட்டது.
மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வி.பி.சிங் ஆட்சியில் வழங்கப்பட்ட நிலையில், அதை உயர்கல்வி நிறுவனங்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தில் சேர்க்க பா.ம.க. வலியுறுத்தியது. பா.ம.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் அந்தக் கோரிக்கையை பொதுச் செயல்திட்டத்தில் காங்கிரஸ் சேர்த்துக் கொண்டது.
2004ஆம் ஆண்டுக்கு முந்தைய சமூக நீதி வரலாற்றில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த இடமும் கிடையாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போதே, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க தனி ஆணையம் அமைக்கப பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை காங்கிரஸ் கட்சி செய்யவில்லை.
அதைக் கண்டித்து அண்ணல் அம்பேத்கர் பதவி விலகிய பிறகு தான் காகா கலேல்கர் தலைமையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணையத்தை நேரு அரசு அமைத்தது. ஆனால், அந்த ஆணையத்தின் அறிக்கையை செயல்படுத்தாமல் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்தவர் தான் அன்றைய பிரதமர் நேரு.
கலேல்கர் ஆணைய அறிக்கை 1955ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்ட நிலையில், அதன்பின் 1977&ஆம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான இரண்டாவது ஆணையம் அமைக்கப்படவே இல்லை.
அதன்பின் 1979ஆம் ஆண்டு ஜனதா ஆட்சியில் அமைக்கப்பட்ட மண்டல் ஆணையம் 1980ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியில் அதன் அறிக்கையை தாக்கல் செய்த போதிலும், அதை காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை. இந்திரா காந்திக்குப் பிறகு இராஜிவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மண்டல் ஆணையத்தின் அறிக்கையை ‘புழுக்கள் நிறைந்த குடுவை’ என்று கூறி அதைத் தொடக்கூட மறுத்தார். இவை அனைத்தும் பதியப்பட்ட வரலாறு ஆகும்.
சமூகநீதிக்கு எதிராக இத்தகைய பின்னணி கொண்ட காங்கிரஸ் தலைமையிலான அரசிடமிருந்தே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க பாட்டாளி மக்கள் கட்சியால் முடிந்தது என்றால், அதற்கு காரணம் சமூகநீதிக் கொள்கையில் பா.ம.க.வுக்கு இருந்த உறுதிப்பாடும், நாடாளுமன்றத்தில் பா.மக.வுக்கு இருந்த வலிமையும் தான். நாடாளுமன்றத்தில் பா.ம.க.வை விட திமுகவுக்கு அதிக வலிமை இருந்த போதிலும் சமூகநீதிக்காக துரும்பைக் கூட கிள்ளிப் போடாத இயக்கம் தான் திமுக என்பதும் மக்கள் அறிந்த வரலாறு ஆகும்.
2004ஆம் ஆண்டில் சமூகநீதிக் கொள்கையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த அளவு உறுதியுடன் இருந்ததோ, அதே உறுதியுடன் தான் இப்போதும் உள்ளது. நாடாளுமன்றத்தில் அப்போதிருந்த அளவுக்கு வலிமையை இப்போதும் பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கொள்கை வலிமையையும், அதிகார வலிமையையும் பயன்படுத்தி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பா.ம.க.வால் முடியும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நீதிபதி ரோகிணி ஆணையத்தை அமைத்து, அதன் அறிக்கையை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இக்கோரிக்கையையும் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக் கொள்கைகளில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியுடன் போராடும். ஈழப்போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, அவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்படி ஈழத்தமிழ் அமைப்புகள் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரை கெஞ்சின. ஆனால், கலைஞரோ,‘‘ நாங்களே அடிமைகள் தான். ஒரு அடிமை, இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?” என்று பெரியார் சொன்னதைக் கூறி ஈழத்தமிழர்களை கலைஞர் கைவிட்டார். பா.ம.க. பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ அத்தகைய துரோகத்தை செய்யாது; சமூகநீதியை நிச்சயமாக வென்றெடுத்தே தீரும் என்று தம்பி மு.க.ஸ்டாலினுக்கு நான் உத்தரவாதம் வழங்குகிறேன்.
இது ஒருபுறம் இருக்க, சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக அளித்த உத்தரவாதத்தை இரு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றினோமா? என்பதை நேர்மையுடனும், மனசாட்சியுடனும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 3 முறை சாதிவாரி வாக்கெடுப்பு நடத்தும் வாய்ப்புகளை உருவாக்கியது பா.ம.க. ஆனால், அந்த வாய்ப்புகளை கலைத்து வீணடித்தது திமுக அரசு தான். 1988ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆளுனர் அலெக்சாண்டர் ஆணையிட்டிருந்த நிலையில், 1989இல் ஆட்சிக்கு வந்த கலைஞர், அதை ரத்து செய்து விட்டார்.
69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த 2010இல் உச்சநீதிமன்றம் ஆணையிட்ட போதிலும், அன்றைய முதல்வர் கலைஞர் அதை செயல்படுத்தவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 2020ஆம் ஆண்டில் நீதிபதி குலசேகரன் ஆணையம் அமைக்கப் பட்டது. ஆனால், 2021இல் மு.க.ஸ்டாலின் அரசு அதை கலைத்து விட்டதால் வாய்ப்பு வீணானது. சமூகநீதிக்கு எதிராக இத்தனை துரோகங்களை செய்து விட்டு, சமூகநீதி குறித்தெல்லாம் திமுக பேசுவது முரண்பாட்டின் உச்சமாகும்.
இந்தியாவின் 6 மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவு 75% ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறுகின்றன. திமுக கூட்டணி அமைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி கூறுகிறார்.
ஆனால், மு.க.ஸ்டாலின் மட்டும் மத்திய அரசு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மீண்டும், மீண்டும் கூறுவதற்கு காரணம் அவரது அறியாமை அல்ல… தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் வன்னியர் உள்ளிட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு விடக் கூடாது என்ற வன்மம் தான் காரணம். இதை மு.க.ஸ்டாலின் அவர்களின் மனசாட்சி ஒப்புக்கொள்ளும்.
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 2 ஆண்டுகள் முடிகின்றன. தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால் வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு நிலை குறித்த தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நானே நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்; எட்டு முறை அவருக்கு கடிதம் எழுதினேன். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான குழுவினர் 3 முறை முதலமைச்சரை சந்தித்து இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தினர். பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் அடங்கிய குழுவினர் 50 முறைக்கும் கூடுதலாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் ஒரு துளி கூட முன்னேற்றம் ஏற்படவில்லை.
மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் வன்னியர்களுக்கு எப்போதோ இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், பிற சமூகங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு நிறைவேற்றும் மு.க. ஸ்டாலினுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஆனால், மேடைகளில் மட்டும் சமூகநீதியில் அக்கறைக் கொண்டவர் போல நடிக்கிறார். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி விட்டு, அதன்பிறகு சமூகநீதி பற்றி பேச வேண்டும்.
ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்… சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக திமுகவுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர். அதை திமுக விரைவில் உணரும்.
இவ்வாறு கூறி உள்ளார்.