சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஒன்றரை லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், தகவல்… தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும், டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.43 கோடியே 6 லட்சம் பணம் பிடிபட்டுள்ளது. 2 கோடிக்கும் அதிகமான மதுபான வகைகள் மற்றும் 60 லட்சத்துக்கும் அதிகமான போதை பொருட்கள் ஆகியவையும், 54 கோடிக்கும் அதிகமான பரிசு பொருட்களும் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து, அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் கண்டுகொள்ளாமல் அரசியல் கட்சியினர் வீதி வீதியாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்ந நிலையில், மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த, மாநில தலைமை தேர்தல் ஆணையர் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக கூறிய காவல்துறை உயர்அதிகாரிகள், தேர்தல் பணிக்காக, மாநிலம் முழுவதும் ஒன்றரை லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 200 கம்பெனி துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களில் 16 கம்பெனியை சேர்ந்தவர்கள் சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் சென்னைக்கு இதுவரை 2 கம்பெனி துணை ராணுவ படையினர் மட்டுமே வந்து உள்ள நிலையில் மீதமுள்ள 14 கம்பெனி படையினரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வர உள்ளனர். தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் படிப்படியாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.43 கோடியே 6 லட்சம் பணம் பிடிபட்டுள்ளது. 2 கோடிக்கும் அதிகமான மதுபான வகைகள் மற்றும் 60 லட்சத்துக்கும் அதிகமான போதை பொருட்கள் ஆகியவையும், 54 கோடிக்கும் அதிகமான பரிசு பொருட்களும் சிக்கியுள்ளன.
தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில் அடுத்தடுத்த நாட்களில் பறக்கும் படை சோதனையை மேலும் தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதுமட்டுமின்றி, தேர்தலின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக அனைத்து போலீஸ் நிலையங்களில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தேர்தல் பாதுகாப்பு பணிகளை மாநில தேர்தல் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தேவையான பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சென்னையில் 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஓட்டு போடுவதற்கு 3,719 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 579 வாக்குச்சாவடிகள் பதட்டமான சாவடிகள் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சாவடிகள் அனைத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக் கப்பட உள்ளது. சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.