சென்னை: காஞ்சிபுரம் நகை கடை கொள்ளை வழக்கில்  தலைமறைவாக இருந்த கொள்ளையன் ஆந்திராவில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து ஏராளமான நகைகள் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மார்ச் 3ந்தேதி அன்று  காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு பகுதியில் வசித்து வந்த  நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த கொள்ளையின்போது, அங்கிருந்த  150 சவரன் நகை  ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை போனதாக கூறப்பட்டது. சம்பவத்தன்று நகைக்கடை அதிபர், வீட்டை பூட்டிவிட்டு, உறவினர் வீட்டு  திருமண விழாவுக்கு சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர் உதவியுடன் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த  கொள்ளை சம்பவம் தொடர்பாக, விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி மற்றும் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து  கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் ஆந்திராவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற தனிப்படையினர், அந்த பகுதி காவல்துறை உதவியுடன், கொள்ளையனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் என ஏராளமான பொருட்களையும் பறிமுதல் செய்து சென்னை அழைத்து வந்தனர்.  மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.