சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மைக் சின்னம் வேண்டாம், வேறு சின்னம் வேண்டும் என்று கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 19ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. அதாவது வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 27-ந் தேதி கடைசி நாளாகும். அதையடுத்து மார்ச் 28ந்தேதி வேட்பு மனு மீதான பரிசீலனையும், மார்ச் 30ந்தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறவும் கடைசி நாளாகும். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதனால், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனுத்தாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளார். இதற்கிடையில், நாம் தமிழர் கட்சிக்கு உரிய சின்னமான கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அதற்கு பதில் மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில், தங்களுக்கு வேறு சின்னம் ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்கப்பட்டுள்ளது.