பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் உயர்கல்வித் துறை அமைச்சரானார்.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பொன்முடி அறிவித்தார். மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பு காரணமாக சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதை அடுத்து அவரது சிறைத்தண்டனையை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அடுத்து சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தொடரும் பொன்முடிக்கு அமைச்சர் பதவி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக ஆளுநருக்கு பரிந்துரைத்த நிலையில் இதனை ஆளுநர் ஏற்க மறுத்தார்.

இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று செயல்படுவதுதான் ஆளுநர் பொறுப்புக்கு உள்ள கடமை என்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுகுறித்து 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் ரவிக்கு நேற்று உத்தரவிட்டது.

இதனையடுத்து இன்று பிற்பகல் 3:30 மணிக்கு பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.

அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பொன்முடி மீண்டும் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.