சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணியில் பலத்த இழுபறிக்கு பின் இணைந்துள்ள தேமுதிக, தாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளதாக தெரிவித்து உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத்தாக்கலும் தொடங்கி உள்ளது. ஆனால், திமுக, அதிமுகவை தவிர பல முக்கிய கட்சிகள் இன்னும் வேட்பாளர்களையே அறிவிக்கவில்லை. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக தாங்கள் கேட்ட தொகுதிகளை வழங்கி உள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), கடலூர், தஞ்சாவூர், மத்திய சென்னை, விருதுநகர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 5 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளது. இதனை பத்திரிகையாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, இன்று தேமுதிக அலுவலகம் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, மறைந்த தேமுதிக தலைவர் கேபட்ன விஜயகாந்த் இல்லாமல் தே.மு.தி.க. சந்திக்கும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது என்றார்.
மரியாதை நிமித்தமாக எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க. அலுவலகம் வந்தார் என்று கூறியவர், வரும் 24-ந்தேதி திருச்சியில் அதிமுக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளோம். அதில் தே.மு.தி.க.வும் பங்கேற்கும் என்றவர், திருச்சி அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் 40 தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்றார்.
கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் தே.மு.தி.க. சந்திக்கும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது என்று கூறிய பிரேமலதா, தே.மு.தி.க. விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க. வழங்கியுள்ளது என்றும், அதிமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கிடு தொடர்பாக வெற்றிலை பாக்கி மாற்றி உறுதி செய்துவிட்டோம், என்றவர், தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார், ராஜ்ய சபா வேட்பாளர் யார் என்பதை நேர்காணல் நடத்தி முறைப்படி வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்போம் என்றார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்று வரும் சோதனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்திற்கு ரெய்டுகள் புதிதல்ல. சோதனையில் விஜயபாஸ்கர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கட்டும். சோதனை வழக்கமான ஒன்றாகவே கருதுகிறேன் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
இந்த சந்திப்பின்போது, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.