சென்னை: தமிழ்நாட்டில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் வகையில், இன்று முதல் வரும் 25ம் தேதி வரை தபால் வாக்கு செலுத்துவதற்கான படிவம் (FORM 12D) வழங்கப்படும் என தேர்தல் ஆணையர் அறிவித்து உள்ளார். முதியோர்கள் உள்ள வீடுகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் தேடிச்சென்று 12D படிவத்தை வழங்குகின்றனர்.
தமிழகம்-புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் முற்கட்ட பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. இந்த மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக நான்கு மனுக்களை தாக்கல் செய்யலாம். இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம்.
அதன்படி தமிழ்நாட்டிலும் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. வேட்புமனுத்தாக்கல் மார்ச் 27-ந் தேதி கடைசி நாளாகும். அதையடுத்து மார்ச் 28ந்தேதி வேட்பு மனு மீதான பரிசீலனையும், மார்ச் 30ந்தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறவும் கடைசி நாளாகும். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதையடுத்து, தேர்தல் ஆணையம், தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட (ஆர்.டி.சி.) அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து மூத்த குடிமக்கள் வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குக்கான படிவம் இன்றுமுதல் வழங்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் சாகு தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியவர், தேர்தல் நடத்தை விதிகள் மீறல் அடிப்படையில், 1 லட்சத்து91,291 அளவிலான அரசுக்கு சொந்தமான பொதுச் சொத்துக்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் தொடர்பான விளம்பரங்கள், வைக்கப்பட்டிருந்த பேனர்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளன. அதேபோல் 52,938 தனியார் இடங்களிலும் அகற்றப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் உரிமம்பெற்ற 13,556 துப்பாக்கிகள் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், 71 துப்பாக்கி உரிமங்கள் முடக்கப்பட்டுள்ளன. 87 துப்பாக்கி உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது 68,320வாக்குச்சாவடிகள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரிக்கும் பணி தொடங்குகிறது. முதலில் இயந்திரங் களின் எண்களை கணினியில் பதிவு செய்து, ஒரு மக்களவை தொகுதியில் உள்ள சட்டப்பேரவை தொகுதி வாரியாக பிரிக்கப்படும். அதன்பின், வாக்குச்சாவடி வாரியாக மீண்டும் பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும். இப்பணிகள் முழுமையாக அரசியல் கட்சி பிரதிநிதிகளின் பார்வையில் நடைபெறும்.
தேர்தல் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11,828 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 10,434 பேரிடம் இருந்து பிரமாண பத்திரம் பெறப்பட்டு உள்ளது. 293 பிடிவாரண்ட்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சிவிஜில் செயலி மூலம் இதுவரை 282 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்கு வசதிஏற்படத்தப்பட்டுள்ளது. அவர்கள்தொடர்பான விவரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளுக்கு இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை அலுவலர்கள் சென்று தபால் வாக்குக்கான விருப்ப படிவம் ( படிவம் 12 டி) பெறுவார்கள். இது கட்டாயமல்ல; விரும்பியவர்கள் மட்டும் படிவத்தை பூர்த்தி செய்து தரலாம்.
அதன்பின், வாக்குப்பதிவுக்கு முன்னதாக, விருப்ப படிவம் தந்தவர்களிடம் சம்பந்தப்பட்ட அலுவலர், வருவாய், காவல் துறையினர் குழுவாக சென்று, தபால் வாக்கு படிவத்தை தந்து, வாக்கு பதிவு செய்த பின், அந்த படிவத்தை பெட்டியில் போடுவார்கள். அதன்பின், இவ்வாறாக பெறப்படும் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்படைக்கப்படும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவிதேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி முன்னரே முடிந்துவிட்டது. இனி, தேர்தல் பணி யில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி, வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின் தொடங்கப்படும்.
‘ பூத் சிலிப்’ பொறுத்தவரை, வரும் மார்ச் 30-ம் தேதி அச்சிடும் பணி தொடங்கப்படும். வாக்குப்பதிவு நாளுக்கு 5 நாட்களுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு முழுமையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.