டெல்லி: போதைபொருள் கடத்தல் மன்னனான முன்னாள் திமுக நிர்வாகி, ஜாபர் சாதிக் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சாதிக் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் திமுக அயலகத்துறை நிர்வாகியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை சென்னை அழைத்து வந்து அயப்பாக்கத்தில் உள்ள என்சிபி (NCB) அலுவகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஜாபர் சாதிக் மீதான போலீஸ் காவல் முடிந்தநிலையில், அவரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தனி விமானம் மூலம் அதிகரிகள் அவரை டெல்லி அழைத்துச் சென்றனர். அவரது காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் போதை பொருள் கடத்தல் மன்னன் சாதிக் தலைமறைவாக இருந்தபோது, கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி, சென்னையில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து, சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி, அவரது வீட்டிற்கு சீல் வைத்து விட்டுச் சென்றனர்.
இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் வீட்டுக்கு வைக்கப்பட்ட சிலை அகற்றக்கோரி, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “இந்த வழக்கிற்கும் ஜாபர் சாதிக்கின் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் தொடர்ச்சியாக வெளியே தங்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உடனடியாக அந்த சீலை அகற்ற உத்தரவிட வேண்டும்” என அதில் குறிப்பிட்டுள்ளது.