கொல்கத்தா
பிரதமர் மோடி அரசுப் பணத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக திருணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் டெரிக் ஓ பிரையன்,
“தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, மார்ச் 15 ஆம் தேதி பிரதமர் மோடி, பா.ஜனதா அரசின் திட்டங்கள் குறித்து வாக்காளர்களுக்கு எழுதிய கடிதம் பிரதமர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அரசு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
வாரணாசி தொகுதி வேட்பாளராக இருக்கும் பிரதமர் மோடியின் இந்த செயல் முற்றிலும் தேர்தல் விதிமீறலாகும்.
இதுபோன்ற பிரசாரங்களைத் தடுக்கவும், அந்த கடிதத்தைத் திருப்பப்பெறவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிரதமரின் கடிதத்தை வாக்காளர்களுக்கு அனுப்புவதற்கான செலவையும் பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடியின் தேர்தல் செலவாகச் சேர்க்க வேண்டும்”
என்று குற்றம் சாட்டி உள்ளார்.