சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் இன்று முதல் சோதனை அடிப்படையில்  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. எதிர்கால நோக்கில் நடைபெறும்   இந்த பணிகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  பழைய மகாலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) பகுதியில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுத்தொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்,  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர்களால் முன்மொழியப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உள்ளதால் இப்பணிகளைக் கருத்தில் கொண்டு, பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றமானது இன்று முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் அப்போலோ சந்திப்பில் வலது புறம் திரும்பி, துரைப்பாக்கம் நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் நேராக சென்று துர்யா ஓட்டல் முன் யு-டர்ன் செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூருக்கு செல்லலாம்.

அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் அப்போலோ சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வேளச்சேரி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் மேலும் நேராக சென்று உலக வர்த்தக மையத்தின் முன் யு-டர்ன் செய்து அப்போலோ சந்திப்பில் இடது புறமாக திரும்பி வேளச்சேரியை அடையலாம்.

வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை மெட்ரோ நிலைய கட்டுமான பணிக்காக சென்னையில்  அண்ணா மேம்பாலம்‌ மெட்ரோ ரயில்‌ நிலையம்‌, நுங்கம்பாக்கம்‌ மெட்ரோ நிலையம்‌ மற்றும்‌ ஸ்டேர்லிங்‌ சாலை மெட்ரோ ரயில்‌ நிலையம் ‌ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  சேத்துப்பட்டில்‌ இருந்து ஜெமினி மேம்பாலம்‌ நோக்கி வரும்‌ வாகனங்கள்‌ காலேஜ்‌ ரோடு, ஹாடேஸ்‌ ரோடு, உத்தமர்‌ காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும்‌ வகையில்‌ செல்லும் ‌(ஏற்கனவே உள்ளபடி). இந்த பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்‌.

இதேபோல்‌, ஜெமினி மேம்பாலத்தில்‌ இருந்து வரும்‌ வாகனங்கள்‌ , உத்தமர்‌ காந்தி சாலை, கோடம்பாக்கம்‌ நெடுஞ்சாலை (டாக்டா்‌ எம்‌.ஜி.ஆர்‌. சாலை) வழியாக வள்ளுவர்‌ கோட்டம்‌ நோக்கி சென்று தங்கள்‌ இலக்கை அடையலாம்‌. (மாற்றுப்பாதை – ஒரு வழிப்பாதை). அமைந்தகரை நோக்கிச்‌ செல்லும்‌ வாகனங்கள்‌ டேங்க்‌ பண்ட்‌ சாலையில்‌ (இடதுபுறம்‌) திரும்பி நெல்சன்‌ மாணிக்கம்‌ சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும்‌ பிற இடங்களுக்குச்‌ செல்லலாம்‌. (எற்கனவே உள்ளபடி).

வள்ளுவர்‌ கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம்‌ நோக்கிச்‌ செல்லும்‌ அனைத்து வாகனங்களும்‌ வள்ளுவர்‌ கோட்டம்‌ சந்திப்பில்‌, வள்ளுவர்‌ கோட்டம்‌ நெடுஞ்சாலை, உத்தமர்‌ காந்தி சாலை வழியாகத்‌ திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம்‌ அல்லது வலதுபுறம்‌ திரும்பி திருமலைபிள்ளை ரோடு, G.N. செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம்‌ (ஜெமினி மேம்பாலம்‌) சென்று அடையலாம்‌.  மற்ற பிற உள்பற சாலைகள்‌ அனைத்தும்‌ மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து அனுமதிக்கப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.