சென்னை:  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரித்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் ரயில், விமானங்களிலும் முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.  ரயில் போக்குவரத்தைப் பொறுத்தவரை 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனால் திட்டமிட்டபடி பயணம் செல்கிறமோ, இல்லையோ டிக்கெட்டை முதலில் புக் செய்திருந்தால் ஒரு செலவு மிச்சமாகிறது. ஆனால் பேருந்துகளில் 30 நாட்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. எஸ்.இ.டி.சி எனப்படும் தொலைதூரங்களுக்கு செல்லக்கூடிய அதிவிரைவு பேருந்துகளுக்கு 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

பண்டிகை அல்லது விடுமுறை காலம் வந்துவிட்டால் ரயில் மற்றும்  தனியார் பேருந்துகளில் விண்ணை முட்டும அளவுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.

இந்த நிலையில், அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதியை 60 நாட்களாக அதிகரித்து,   போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பதிவு செய்யும் பணி நடைமுறையில் இருந்து வந்தது. இது மார்ச் 15 ஆம் தேதி முதல் 60 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது. எனவே பயணிகள் மொபைல் செயலி மற்றும் www.tnstc.in ஆகியவை மூலம் பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.