டெல்லி: நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் தேதி இன்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இதை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  இதனால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள  நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப் பட வேண்டும்.  இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பல கட்டங்களாக  நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இதற்கான அறிவிப்பு  இன்று (மார்ச் 16ந்தேதி) மாலை வெளியாகிறது.

நாடே நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த பரபரப்பான சூழலில்,  மத்தியில் ஆட்சியை  தக்க வைத்துக்கொள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேவேளையில், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற  காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி முயற்சித்து வருகிறது.

நாடு முழுவதும், எந்தெந்த தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதும் குறித்தும் விவாதிக்கப்பட்டு, வேட்பாளர்கள் தேர்வு பணிகளை அரசியல் கட்சிகள்   விறுவிறுப்பாக  மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் 18வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. இதற்காக தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தலைமையில், புதியதாக தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட சுக்பிர் சிங் சந்து மற்றும் க்யானேஷ் குமார் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.

டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாலை 3 மணியளவில்  செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. இதில், எத்தனை கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும், வேட்புமனுதாக்கல், வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும். அறிவிப்பு வெளியானதுமே  இன்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும்.

நாடு முழுவதும் சுமார் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் உள்ள சட்டமன்றங்களின் பதவிக்காலமும் வரும்  ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதன் காரணமாக அவற்றிற்கான தேர்தலும் சேர்த்து நடத்தப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முதற்கட்ட மக்களவை தேர்தலிலேயே, 39 தொகுதிகளுக்கும் எப்போதும் போல  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.