டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை மாநில அரசுகளால் எப்படி நிறுத்த முடியும்? என கேள்வி எழுப்பியுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா , இதை வைத்து, மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோர் வாக்கு வங்கி அரசியல் செய்கின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாவது உறுதி என்றும், இதனால் இஸ்லாமியர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை சில தினங்களுக்கு முன் அமல்படுத்தி உள்ளது. அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில பிரிவினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளும் முதல்வர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், இஸ்லாமிய அமைப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என அந்தந்த மாநிலத்தை ஆளும் முதல்வர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்துள்ளார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாவது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. குடியுரிமை திருத்த சட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அப்படி இருக்கும்போது தமிழக அரசு உள்ளிட்ட மாநில அரசுகளால் எப்படி நிறுத்த முடியும்?
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாவது உறுதி. மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோர் வாக்கு வங்கி அரசியல் செய்கின்றனர்.
இந்திய அரசமைப்பின் 11-வது சட்டப்பிரிவு குடியுரிமை தொடர்பான விதிமுறைகளை உருவாக்குவதற்கான அனைத்து அதிகாரங்களையும் பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது. இது மத்திய அரசு தொடர்புடையது. மாநில அரசை சார்ந்தது அல்ல. தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொருவரும் ஒத்துழைப்பாளர்கள் என்று நினைக்கிறேன். திருப்பதிப்படுத்தும் அரசியலுக்கான அவர்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
சிஏஏ-வை திரும்பப் பெறுவது நடக்காத விசயம். இது முழுக்க முழுக்க அரசமைப்பு ரீதியாக செல்லும்படியாகும் சட்டம். இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை.
இந்தியா கூட்டணி அதிகாரத்திற்கு வர முடியாது என்பது அவர்களுக்கு ஏற்கனவே தெரியும்.
சிஏஎ சட்டத்தைக்கண்டு சிறுபான்மையினர் அஞ்ச வேண்டாம் என்று நானே பலமுறை கூறியிருக்கிறேன். சிஏஏ குறித்து கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில்போது கொடுத்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றி உள்ளோம் என்றவர், கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக இந்த சட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த சட்டத்தால் நமது நாட்டைச் சேர்ந்த எந்தவொரு குடிமக்களின் உரிமையும் பாதிக்கப்படாது என கூறியவர், இந்து, கிறிஸ்தவ அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கவே சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதே தவிர யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல.
சிஏஏ சட்டத்தை கண்டு சிறுபான்மை யினர் அஞ்சத் தேவையில்லை. எக்காரணத்தை கொண்டும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடம் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.