டெல்லி: மத்திய பாஜக அரசு சிஏஏ சட்டத்தை அதிரடியாக அமல்படுத்தி உள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் தகுதியான நபர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க ‘indiancitizenshiponline.nic.in’ என்கிற புதிய இணைய தளத்தை தொடங்கி உள்ளது. மேலும், ‘CAA-2019’ என்ற மொபைல் செயலியும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் மக்கள் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ளனர். விரைவில், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டமசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மதம் சார்ந்த துன்புறுத்தல்கள் மற்றும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் அடையும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின், பெளத்தம், பாரசீகம், கிறிஸ்தவம் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு குடியுரிமை வழங்குவதை இந்த சட்டம் உறுதி செய்கிறது.
இந்த சட்டத்தில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்பதால், 2019ஆம் ஆண்டு முதல் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மக்கள் புலம்பெயரும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை சேர்க்காதது மற்றும் இலங்கையில் இருந்து அகதிகளாக புலம் பெயரும் மக்களுக்கு குடியுரிமை வழங்காததை குறித்து குறிப்பிடப்படாததால் தமிழக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தது.
மேலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்தது. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகளை வகுப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நாடாளுமன்ற துணைச் சட்டப்பிரிவு குழு கால அவகாசம் வழங்கியது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படலாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தபட உள்ளதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்து இருந்தார். அதற்கு முன் நாடு முழுவதும் ஒரு வார காலத்திற்குள் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் சிஏஏ அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாகூர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு முன்பாகவே இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி சிஏஏ சட்டம் அரசிதழில் வெளியானதாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சட்டம் இயற்றப்பட்டு ஏறத்தாழ 4 ஆண்டுகளுக்கு பின்னர் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வருவதாக விதிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சிஏஏ சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர்களின் வசதிக்காக புதிய இணையதளத்தை மத்தியஅரசு தொடங்கி உள்ளது. மேலும், இதுதொடர்பான செயலியும் விரைவில் அறிமுகப்படும் என அறிவித்து உள்ளது.