சென்னை: ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னான, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், திமுகவின் முன்னாள் அயலக பிரிவு துணை அமைப்பாளருமான, ஜாபர் சாதிக் ஏற்கனபே போதைபொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்மீது, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஜாபர் சாதிக்கை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர் போதைப்பொருள் கடத்தலில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர் பாக அமலாக்கத்துறை இனி விசாரிக்க தொடங்கும். இதனால், ஜாபர் சாதிக் திரைத்துறை, கட்டுமான நிறுவனங்கள், தொழிற்நிறுவனங்கள், மற்றும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய தொகைகள் குறித்து விசாரணை நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமறைவாக இருந்த சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக், ஜெய்ப்பூரில் தலைமறைவா கஇருந்தபோது, போதை பொருள் தடுப்பு காவல்துறையினரால் பிடிபட்டார். போதை பிசினசில் கிடைத்த கோடிக்கணக்கான ஜாபர், பணத்தை தமிழக சினிமா, ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு செய்திருப்பதையும், மிகப்பெரிய அரசியல் புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதையும் ஜாபர் சாதிக் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்திருப்பதாக, என்.சி.பி., எனப்படும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக நியூசிலாந்து நாட்டு போலீசிடம் இருந்து ரகசிய தகவல் வந்ததன் அடிப்படையில், டில்லியில் சமீபத்தில் என்.சி.பி., அதிகாரிகள், டில்லி போலீஸ் துணையுடன் சோதனை நடத்தினர். அப்போது, தமிழகத்தை சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசோக்குமார் ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப வைத்திருந்த, 50 கிலோ ‘ஸூடோ-எபிட்ரின்’ என்ற ரசாயன பொருளை கைப்பற்றினர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ரசாயனம், ‘மெத்தாம்பெட்டமைன்’ என்ற பயங்கரமான போதை பொருள் தயாரிக்க மூலப்பொருளாக பயன் படுகிறது. விசாரணையில், இந்த சர்வதேச கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இவர், தி.மு.க.,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார். அவரது சகோதரர்கள் முகமது சலீம் மற்றும் மைதீனும் இதில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3,500 கிலோ போதை பொருட்களை 45 முறை வெளிநாடுகளுக்கு அனுப்பி, பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த செய்தி வெளியானதும், ஜாபர் சாதிக் தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டார். அவர், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க மத்திய அரசு, ‘லுக் அவுட் நோட்டீஸ்’ பிறப்பித்தது. இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை, என்.சி.பி., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து, என்.சி.பி., துணை தலைமை இயக்குனர் ஞானேஷ்வர் சிங் கூறியதாவது: ஜாபர் சாதிக், சர்வதேச அளவில் போதை பிசினஸ் செய்து வந்துள்ளது விசாரணையில் உறுதியாகி உள்ளது. டில்லி, தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் இவரது நடவடிக்கைகள் பரவியிருந்தன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேஷியா நாடுகளிலும் இவரது நெட்வொர்க் விரிந்து கிடக்கிறது. போதை கடத்தல் வாயிலாக கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். அதை, திரைப்படம், கட்டுமானம், ஹோட்டல், ரிசார்ட் தொழில்களில் முதலீடு செய்துள்ளார். கடத்தல் தொழிலை ரகசியமாக வைத்துக் கொண்டு, வெளியுலகிற்காக இந்த தொழில்களை நடத்தி வந்துள்ளார். கடந்த மாதம் 15ம் தேதி டில்லி போலீசின் சிறப்பு பிரிவு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து, மூன்று பேரை கைது செய்தனர். அவெந்தா என்ற பெயரில் இயங்கிய கம்பெனியின் குடோனில், 50 கிலோ போதை பொருளும் கைப்பற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஜாபர் சாதிக் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து, 50 கிலோ ஸூடோ-எபிட்ரின் போதை பொருளுடன் அவரை பிடித்துள்ளோம். இரண்டு வாரமாக திருவனந்தபுரம், மும்பை, புனே, ஆமதாபாத், ஜெய்ப்பூர் என, பல நகரங்களுக்கு ஓடி ஓடி, ஜாபர் சாதிக் பதுங்கி இருந்துள்ளார் என என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த கும்பல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேஷியா நாடுகளுக்கு போதை பொருட்களை கடத்துவதுடன், சத்து மாவு, தேங்காய் பொடி போன்ற உணவு பொருட்களை மொத்தமாக ஏற்றுமதி செய்யும் போர்வையில் போதை பொருட்களை கடத்தி வந்துள்ளனர்.முதலில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும், தற்போது கைதான ஜாபர் சாதிக்கும் இந்த விஷயங்களை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் தந்துள்ளனர். வெளிநாடுகளுக்கு, 40 முதல் 45 கன்சைன்மென்டுகளாக 3,500 கிலோ ஸூடோ-எபிட்ரின் கடத்தி உள்ளதாக ஜாபர் சாதிக் ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு கிலோ கடத்தினால் சாதிக்கிற்கு 1 லட்சம் ரூபாய் கமிஷன் கிடைத்துள்ளது.
சென்னையில் வசித்து வந்த ஜாபர் சாதிக், தி.மு.க.,வுடன் தொடர்புள்ளவர். அந்த கட்சியின் அயலக அணியில் பொறுப்பிலும் இருந்துள்ளார். சாதிக் பணம் எங்கெல்லாம் முதலீடு செய்யப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்திலும், அதிகாரத்திலும் உள்ள முக்கியஸ்தர்கள் பங்குதாரர்களாக இருக்கின்றனர். பெரும்பாலானோர் தமிழ் திரையுலக பிரபலங்கள். சாதிக் தொழிலுடன் சம்பந்தப்பட்ட ஒருவரை கூட விட்டு வைக்காமல் தீவிரமாக விசாரித்து, முழு உண்மையை வெளியே கொண்டு வருவோம். போதை கடத்தல் வாயிலாக கிடைத்த மொத்த பணத்தையும் பறிமுதல் செய்வோம்.
கடத்தல் பணத்தில் ஜாபர் சாதிக் ஒரு ேஹாட்டல் கட்டியுள்ளார். அந்த ேஹாட்டலில் இருந்து மலேஷியாவுக்கு இன்னொரு சிந்தடிக் போதை பொருளை அவர் அனுப்பியதும் தெரியவந்துள்ளது. சர்வதேச சந்தையில் போதை பொருளின் தேவைக்கு ஏற்ப அதன் விலை ஏறி இறங்கும். இங்குள்ளதை காட்டிலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் இந்த போதை பொருட்களுக்கு பல மடங்கு விலை கிடைக்கும்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பிரபலங்களின் பெயர்களை தற்போது வெளியிட முடியாது. அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விசாரணை இறுதியில் அவர்கள் யார் என்பதை தெரிவிப்போம். குற்றவாளிகள் எந்த ஜாதி, மதம், கட்சி என்பதை எல்லாம் நாங்கள் பார்க்கவில்லை. சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறோம். சட்டத்தை மீறுகிறவர்கள், குற்றம் புரிபவர்கள் எவராக இருந்தாலும் நடவடிக்கை பாயும். இதுவரை நான்கு பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். யாருக்கெல்லாம் சம்மன் அனுப்புவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. இவ்வாறு ஞானேஷ்வர் சிங் கூறினார்.
சாதிக்கை டில்லி கோர்ட்டில் ஆஜர்படுததினர். அவரை ஒரு வாரம் என்.சி.பி., காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.
இந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் ஜாபர்சாதிக் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. போதைப்பொருள் கடத்தலில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது என கூறியுள்ள அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளது. அவர் கொடுக்கும் தகவல்களைத் தொடர்ந்து, அடுத்த கட்ட விசாரணை இருக்கும் என தலைநகர தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக முன்னாள் நிர்வாகியான தமிழ்நாட்டைச் சேர்ந்த போதைபொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது