சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க கோரி மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  தமிழ்நாட்டில், போதைப்பொருள் விற்பனை செய்வதன் மூலம்  கிடைத்த பணத்தை தேர்தலில் செலவிட திமுக முயற்சி செய்து வருகிறது என குற்றம் சாட்டினார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  பிப்ரவரி 10ந்தேதி அன்று சந்தித்து மனு கொடுத்தார். அதில்,  தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வின்போது,  அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் கவர்னர் மாளிகை வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,  தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ”போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநரிடம் தெரிவித்தோம். இப்படியே சென்றால் போதைப்பொருள் மாநிலமாக தமிழகம் மாறிவிடும் என்பதை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் ஒரு துளி போதைப் பொருள் கூட இருக்கக் கூடாது என்று ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம்.

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கவில்லை. இளைஞர்கள், மாணவர்கள் பெருமளவு போதைப் பொருளால் பாதிக்கப்படுகின்றனர். இதே நிலை நீடித்தால் மக்கள் வாழ்க்கை சீரழியும். அண்மையில் கைதான ஜாபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளாக கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தோம். காவல்துறை செயல்பாடு சந்தேகமாக உள்ளது.  இதே நிலை நீடித்தால் மக்கள் வாழ்க்கை சீரழியும். இளைஞர்கள், மாணவர்கள் போதை பொருட்களால் பாதிக்கப்படுகின்றனர். இது நீடித்தால் வரும் 7 ஆண்டுகளில் தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிடும்” .

”போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை அமைச்சர் உதயநிதியின் டிரஸ்டுக்கு ஜாபர் சாதிக் தந்துள்ளார். போதைப்பொருள் கடத்திய பணத்தில் தான், திமுக தேர்தலை சந்திப்பதாக செய்திகள் வருகின்றன.

போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு சநதேகத்துக்கிடமாக உள்ளது. மோசமான நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதற்கு திமுக தான் காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் பதவி விலக வேண்டும் என மக்களை எதிர்பார்க்கின்றனர்” என்றார்.

மடியில் கனம் இருப்பதால் திமுகவிற்கு பயம். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஜாபர் சாதிக் உடன் முதல்வர் ஸ்டாலின் தொடர்பில் இருந்ததாக பத்திரிகை களில் செய்திகள் வந்தன. தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இபிஎஸ் கூறியுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரி ஞானேஷ்வர் சிங், “போதைப்பொருள் கடத்தலை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஜாபர் சாதிக் திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம்” எனக் குறிப்பிட்டார்.

“சர்வதேச போதைப்பொருள் கடத்தலிலிலும் அவருக்குத் தொடர்பு உள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு போதைப்பொருள்களைக் கடத்தி வந்தார்” என்றும் , “போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகளில் முதலீடு செய்திருக்கிறார். இந்த முதலீடுகள் குறித்து விசாரிக்கப்படும். சுமார் 3,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்கள் பலருடன் தொடர்பு இருப்பதாவும்  உணவுப்பொருள் ஏற்றுமதி செய்வது போல போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்தார் எனவும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக ஞானேஷ்வர் சிங் கூறினார்.

மேலும், ஜாபர் சாதிக், “போதைப்பொருட்கள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தை அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்துள்ளார். மங்கை என்ற தமிழ் திரைப்படத்தை ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். சென்னையில் ஓட்டல் தொடங்கியிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் பலருடன் ஜாபர் சாதிக்கிற்குத் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது” என்று ஞானேஸ்வர் தெரிவித்துள்ளார்.

“விசாரணைக்குப் பிறகு ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய நபர்களின் பெயர்களை வெளியிடுவோம். சென்ற பிப்ரவரி 25ஆம் தேதி கைது செய்யப்பட்ட 3 பேர் கொடுத்த தகவலின்படி ஜாபர் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஞானேஷ்வர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.