ராஞ்சி: இந்தியாவிலேயே முதன்முறையாக மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் ஜார்கண்ட் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக, ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் புதன்கிழமை ‘வித்வா புனர்விவா ப்ரோத்சஹன் யோஜனா’ (விதவை மறுமணம் ஊக்குவிப்புத் திட்டம்) தொடங்கினார், இதன் கீழ், கணவர் இறந்த பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்கள், 2 லட்சம் அரசு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மறுமணம் செய்துகொள்ளும் விதவை பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2 லட்சம் வழங்க உதவித்தொகை வழங்கபடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து ராஞ்சியில் உள்ள தானா பகத் உள்விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், “பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், வித்வா புனர்விவா ப்ரோட்சகன் யோஜனா’ என்ற திட்டத்தை முதல்வர் சம்பாய் சோரன் புதன்கிழமை தொடங்கினார். அதன்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாக அறிவித்ததுடன், இத்திட்டத்தின் பயனாளிகள் ஏழு பேருக்கு மொத்தம் ரூ.14 லட்சத்தை முதல்வர் வழங்கினார். இத்திட்டம் விதவைகளின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் மற்றும் பெண்களின் மறுமணம் குறித்த சமூகக் கருத்தை மாற்றும்” என்று கூறினார்.
மேலும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு இனி ரூ.9,500 மற்றும் உதவியாளர்களுக்கு மாதம்தோறும் ரூ.4750 கவுரவ ஊதியம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். இந்நிகழ்ச்சியில், முதியோர் ஓய்வூதியத்தின் முதல் தவணையை 1,58,218 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு முதல்வர் மாற்றினார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பயனாளி திருமண வயதுடையவராக இருக்க வேண்டும், அரசு ஊழியர், ஓய்வூதியம் பெறுபவர் அல்லது வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது. பலன்களைப் பெற, பயனாளி மறுமணம் செய்த நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் விண்ணப்பித்து, மறைந்த கணவரின் இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வருமான வரி செலுத்துவோர் இந்த திட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கூறிய குழந்தைகள் வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறை செயலர் மனோஜ் குமார், சமூகத்தில் தனிமையில் இருக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளின் மரணத்திற்குப் பிறகு ஆதரவற்றவர்களாகி, மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம். அப்படிப்பட்ட விதவைகள் அனைவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அவர்களுக்கு அரசு நிதியுதவி அளிக்கும், என்றார்.
இது தொடர்பாக பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையின் செயலாளர் மனோஜ் குமார், விதவைகள் கண்ணியத்துடன் வாழ இந்த திட்டம் உதவும் என்பதால், இதனை ஜார்க்கண்ட் அரசு அமல்படுத்தி இருக்கிறது. விதவைகள் தங்கள் திருமணப் பதிவுச் சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். மறுமணமான ஒரு வருடத்தில் அவர்களது வங்கி கணக்கில் 2 லட்சம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் அரசு 2024-25 நிதியாண்டில் ரூ.1.28 லட்சம் கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. சம்பை சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.