டெல்லி: இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையை  பிரதமர் மோடி இன்று  தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடியபடி பயணம் செய்தார்.  இந்த ரயில் சேவையான கொல்கத்தா – ஹவுரா ரூட்டில் இயக்கப்பட உள்ளது.

நீருக்கடியிலான நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை, கொல்கத்தாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நுறாண்டு கனவான இந்த ரயில் சேவையானது,  ஆற்றுக்கு அடியில் 16.5 கிலோ மீட்டர் ஆழத்தில் 16கிலோ மீட்டர் தூரத்துக்கு நீருக்கடியில்  செல்லும் வகையில்  அமைகக்ப்பட்டு உள்ளது.

இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து மெட்ரோ ரயிலில் பயணித்தார். ஹூக்ளி ஆற்றின் கீழ் கட்டப்பட்ட மெட்ரோ சுரங்கப்பாதை கொல்கத்தா மெட்ரோவின் கிழக்கு-மேற்கு கேர்டாரின் ஒரு பகுதியாகும். இந்த பிரிவு ஹவுரா மைதானத்தை எஸ்பிளனேடுடன் இணைக்கிறது.

இதன்  திறப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், பயணிகள் சேவைகள் பிற்காலத்தில் தொடங்கும், என்று CPRO மெட்ரோ ரயில்வே கௌசிக் மித்ரா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மெட்ரோ ரயில் சேவையின் புதிய வழித்தடங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அவை, 4.8 கிலோமீட்டர் நீள எஸ்பிளானடே – ஹவுரா, 1.2 கிலோமீட்டர் நீள டரடலா – மஜேர்ஹத், 5.4 கிலோமீட்டர் நீள நீயூ கரியா – ரூபியா ஆகியவை ஆகும்.

இதில் மிகவும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது எஸ்பிளானடே – ஹவுரா இடையிலான வழித்தடம். இது ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் இயக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.  இதற்காக 520 மீட்டர் நீளத்திற்கு இரண்டு சுரங்கங்கள் உருவாக்கப்பட்டு அதன் வழியே மெட்ரோ ரயில்கள் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பின்னணியை ஆராய்ந்தால் 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேய பொறியாளர் ஒருவர், இதன் சாத்தியக் கூறுகள் பற்றி பேசியிருக்கிறார். அவருடைய பெயர் சர் ஹார்லி டெய்ரிம்ப்ளே-ஹே. 1921ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பாயும் ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் ரயிலை இயக்குவது சாத்தியம் என்று கூறியுள்ளார். அவரது கனவு இன்று நிறைவேறி உள்ளது.

Photo and Video: Thanks ANI

 

இந்த மெட்ரோ ரயில் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்: 

கிழக்கு-மேற்கு மெட்ரோவின் 16.6 கிலோமீட்டர்களில், 10.8 கிலோமீட்டர் பாதை நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டது. இதில் ஹூக்ளி ஆற்றின் அடியில் உள்ள நிலத்தடி சுரங்கப்பாதையும் அடங்கும்

ஹவுரா மைதானம் -எஸ்பிளனேட் மெட்ரோ பாதை இடையே ஹூக்ளி நதியின் நீர் மட்டத்தில் இருந்து 16 மீ ஆழத்தில் 520 மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை மெட்ரோ ரயில் வெறும் 45 நொடிகளில் கடந்து செல்லும்

கிழக்கு-மேற்கு மெட்ரோ வழித்தடத்தின் ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் காரிடாரானது, ஹவுரா மெட்ரோ நிலையத்தில் இந்தியாவின் ஆழமான மெட்ரோ நிலையத்தைக் கொண்டிருக்கும்.

ஹவுரா மைதான் மற்றும் எஸ்பிளனேட் இடையே 4.8 கிலோமீட்டர் நீளத்திற்கு பரவியுள்ள இந்த இருப்புப் பாதை, கிழக்கு-மேற்கு மெட்ரோ நடைபாதையின் ஒரு முக்கியப் பகுதியை உருவாக்குகிறது.

தகவல் தொழில்நுட்ப மையமான சால்ட் லேக் செக்டர் V போன்ற முக்கிய பகுதிகளை இணைக்கிறது.

மெட்ரோ ரயில் சேவையின் இந்த பிரிவு, ஆறு நிலையங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் மூன்று சுரங்கப்பாதை நிலையங்கள் ஆகும். இவை பயணிகளுக்கு மேம்பட்ட அணுகலை உறுதியளிக்கிறது. அதோடு, நகரத்தின் பரபரப்பான பகுதிகளை எளிதில் அணுக வழிசெய்கிறது.

ஏப்ரல் 2023 இல், இந்தியாவில் முதல் முறையாக நீர்மட்டத்திற்கு கீழே 32 மீட்டர் சுரங்கப்பாதை வழியாக ஹூக்ளி ஆற்றின் அடியில் ஒரு சோதனை பயணம் செய்யப்பட்டது.

கிழக்கு-மேற்கு மெட்ரோ வழித்தடத்திற்கான பணி 2009 இல் தொடங்கியது மற்றும் ஹூக்ளி ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி 2017 இல் தொடங்கியது.

இந்தத் திட்டம் போக்குவரத்துத் தேவைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், கொல்கத்தாவில் நீண்ட காலமாக நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டையும் சமாளிக்கும்.

கொல்கத்தா மெட்ரோ ஜூன் அல்லது ஜூலையில் சால்ட் லேக் செக்டார் V மற்றும் ஹவுரா மைதானம் இடையே முழு கிழக்கு-மேற்கு பாதைக்கான வணிக நடவடிக்கைகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, கொல்கத்தாவில் கவி சுபாஷ்-ஹேமந்தா முகோபாத்யாய் மற்றும் தரதாலா-மஜெர்ஹாட் மெட்ரோ பிரிவுகளையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.